தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் தேரோட்டம்

பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து சுவாமி மற்றும் அம்மன் தேர்களை இழுத்தனர்.
ராஜபாளையம் அருகே தேவதானம் கிராமத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. பஞ்சபூத தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா 10 தினங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. கோவிலின் பரம்பரை அறங்காவலர் துரை ரத்தினகுமார், ராணி ஸ்ரீகுமார் எம்.பி, தங்கப்பாண்டியன் எம். எல். ஏ., செயல் அலுவலர் முருகன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், தளவாய்புரம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து சுவாமி மற்றும் அம்மன் தேர்களை இழுத்தனர். இரண்டு தேர்களும் 4 ரத வீதிகளையும் சுற்றி நிலைக்குத் திரும்பியது.
தேர் வலம் வீதிகளில் பக்தர்கள் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர். தேர் நிலைக்கு நின்ற இடத்திற்கு வந்தும் வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.