திருவண்ணாமலையில் 2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம்

கிரிவலம் சென்று முடித்த பக்தர்கள் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 'அண்ணாமலை' என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதில் சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி நேற்று முன்தினம் இரவு 8.53 மணி அளவில் தொடங்கி நேற்று இரவு 10.48 மணிக்கு நிறைவடைந்தது. இதையொட்டி 10-ந்தேதி இரவிலேயே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை முதல் இரவு வரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
இரவில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக பல்வேறு பகுதியில் இருந்து வந்தபடியே காணப்பட்டனர். இதனால் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் காலை 9 மணி வரையில் அதிகமாகவே காணப்பட்டது. 2-வது நாளாக நேற்றும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பின்னர் பக்தர்களின் கூட்டம் குறைய தொடங்கியது. இருப்பினும் தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கவே பக்தர்கள் தனித்தனியாக கிரிவலம் சென்றனர். மீண்டும் மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. நேற்று இரவு 10.48 மணி வரையில் பவுர்ணமி இருந்ததால் நள்ளிரவு வரையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது. கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு கிரிவலப்பாதையில் பல்வேறு இடங்களில் தண்ணீர், மோர், அன்னதானம் போன்றவை நேற்று இரவு வரையில் தொடர்ந்து வழங்கப்பட்டது.
சித்ரா பவுர்ணமி கிரிவலம் சென்று முடித்த பக்தர்கள் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கும் மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர். வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர், மோர், வாழைப்பழம், தர்ப்பூசணி, பிஸ்கெட், கடலை மிட்டாய் போன்றவை வழங்கப்பட்டது.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நகரை சுற்றி 20 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களின் வசதிக்காக உள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் இரவில் கிரிவலம் சென்ற பக்தர்கள் ரெயில் நிலையத்தில் காத்திருந்து நேற்று காலையில் காட்பாடி மற்றும் விழுப்புரம் மார்க்கமாக சென்ற ரெயில்களில் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு ஏறிச் சென்றனர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது.






