ஏர்வாடி தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நிறைவு

ராமநாதபுரம் மாவட்ட காஜி சலாஹூத்தீன் ஆலிம் ஜமாலி பாஷில் உமரி தலைமையில் உலக நன்மைக்காகவும் அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் 851-வது ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் தலைமையில் ஆலிம் உலமாக்கள் முன்னிலையில் தொடங்கியது. 9-ந் தேதி ஏர்வாடி முஜாஹிர் நல்ல இபுராஹீம் மகாலில் இருந்து யானை, குதிரை, ஒட்டகங்களுடன் கொடி ஊர்வலம் தர்காவை வந்தடைந்தது.
ராமநாதபுரம் மாவட்ட டவுன் காஜி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு இரவு 7 மணி அளவில் கொடியேற்றம் நடைபெற்றது. 21-ந் தேதி மாலை மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா தொடங்கி மறுநாள் அதிகாலை தர்கா மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது.
அதை தொடர்ந்து நேற்று மாலை 5.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட காஜி சலாஹூத்தீன் ஆலிம் ஜமாலி பாஷில் உமரி தலைமையில் உலக நன்மைக்காகவும் அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது. அதை தொடர்ந்து மவுலீது ஓதி, 4 ஆயிரம் கிலோ அரிசியில் நெய் சோறு நேர்ச்சையாக வழங்கப்பட்டது. இதில் தமிழகம் மட்டுமின்றி அக்கம், பக்கத்து மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அகமது இப்ராஹிம், செயலாளர் சித்திக் லெவ்வை, உதவி தலைவர் முகம்மது சுல்தான் மற்றும் நிர்வாக சபையினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பேரில் கீழக்கரை துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.