“எல்லாமே மஞ்சள்”: கல்வி, ஞானம் வழங்கும் வசந்த பஞ்சமி வழிபாடு

சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்தும், மஞ்சள் நிற மலர் மாலை சூட்டியும் வழிபடவேண்டும்.
கல்வி, ஞானம், கலைகளின் கடவுளாக கருதப்படும் சரஸ்வதி தேவியின் அவதார நாளையே 'வசந்த பஞ்சமி' என்று போற்றுகிறோம். இந்த தினம் சரஸ்வதி ஜெயந்தி, சரஸ்வதி பஞ்சமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் சரஸ்வதி தேவியை வழிபட்டால் கல்வி, ஞானம், கலைகள், இசை போன்ற துறைகளில் சிறந்து விளங்கலாம்.
பஞ்சமி திதி மாதந்தோறும் இரண்டு முறை வரும். இதில் தை அமாவாசைக்கு பின் வரும் பஞ்சமி திதியானது 'வசந்த பஞ்சமி' என்று போற்றப்படுகிறது. வசந்த பஞ்சமி வழிபாடு தமிழ்நாட்டில் மிகக்குறைவு என்றாலும், வட மாநிலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்றது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சரஸ்வதியை வழிபடும் தினமாக, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி உள்ளது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் கடைசி மூன்று நாட்களில்தான் சரஸ்வதியை போற்றி கொண்டாடுவார்கள். ஆனால் வடநாட்டில் இந்த நவராத்திரி நாட்களில் துர்க்கையை விதவிதமாக அலங்கரித்து வழிபாடு செய்வார்கள். அதேநேரம் வசந்த பஞ்சமி தினத்தில் சரஸ்வதியை வழிபடுகிறார்கள். இந்த வசந்த பஞ்சமியானது,
பஞ்சாப், அரியானா, ஜம்மு-காஷ்மீர், அசாம், திரிபுரா, ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளில் வசந்த பஞ்சமி அன்று நடைபெறும் சரஸ்வதி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேற்கு வங்காளத்தில், வசந்த பஞ்சமி நாளில்தான், குழந்தைகளின் கல்வியைத் தொடங்குகிறார்கள்.
வசந்த பஞ்சமி தினத்தில் மஞ்சள் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்தும், மஞ்சள் நிற மலர் மாலை சூட்டியும், லட்டு போன்ற மஞ்சள் நிற நைவேத்தியங்கள் படைத்தும் வழிபடுகிறார்கள். பூஜையில் வைக்கப்படும் பிள்ளையாரையும் மஞ்சளில் பிடித்துதான் வைப்பார்கள். பஞ்சாப் பகுதிகளில் இந்த காலகட்டத்தில்தான் கடுகு செடியில் மஞ்சள் நிறப் பூக்கள் பரவலாக பூத்துக் குலுங்கும். அதனை அடிப்படையாகக் கொண்டே, அனைத்திலும் மஞ்சள் வண்ணம் பயன்படுத்தப்படுகிறது.
இந்து காலண்டரின்படி இந்த ஆண்டு நாளை மறுதினம் (23.1.2026) வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது. நாளை (22.1.2026) நள்ளிரவு 2.09 மணிக்கு தொடங்கி, மறுநாள் (23.1.2026) நள்ளிரவு 12.51 மணிக்கு பஞ்சமி திதி நிறைவடைகிறது. பஞ்சமி திதியின்போது பூஜை செய்வது முக்கியம். இந்த நேரம் வழிபாட்டிற்கும் புதிய தொடக்கங்களுக்கும் மிகவும் சாதகமாக கருதப்படுகிறது. வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவியை வழிபட்டு அறியாமை மற்றும் சோம்பல் நீங்கி, அறிவும், தெளிவும் பெற்று சிறந்த வாழ்க்கை வாழ்வோம்.






