திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கருட சேவை: திரளான பக்தர்கள் பங்கேற்றனர்


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கருட சேவை: திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
x
தினத்தந்தி 7 July 2025 11:04 AM IST (Updated: 10 July 2025 11:22 AM IST)
t-max-icont-min-icon

மாட வீதி உள்ளிட்ட தெருக்களின் வழியாக வீதிஉலா வந்த பகவானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் பார்த்தசாரதி பெருமாளுக்கு சித்திரை மாதமும், இங்கு மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் நரசிம்மருக்கு ஆனி மாதமும் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு நரசிம்ம பிரம்மோற்சவம் கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணிக்கு தர்மாதி பீடம், இரவு 7.45 மணி அளவில் புன்னை வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை கோபுரவாசல் தரிசனம் நேற்று காலை 5.30 மணிக்கு நடந்தது. இதற்காக, கருட வாகனத்தில் உற்சவர் அழகியசிங்கர் எழுந்தருளினார். சிங்கராச்சாரி தெரு, தேரடி தெரு, வடக்கு குளக்கரை தெரு, தெற்கு மாட வீதி உள்ளிட்ட தெருக்களின் வழியாக வீதிஉலா வந்த பகவானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இரவு 7.45 மணிக்கு அம்ச வாகனத்தில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) காலை 6.15 மணிக்கு சூரிய பிரபை வாகன சேவை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சந்திர பிரபை நடைபெறுகிறது. வருகிற 8-ந்தேதி காலை 5.30 மணிக்கு பல்லக்கு நாச்சியார் திருக்கோலம், அன்று மாலை 4 மணிக்கு யோக நரசிம்மர் கோலம் வீதி உலா நடக்கிறது. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் 10-ந்தேதி நடைபெறுகிறது.

வருகிற 13-ந்தேதி சப்தாவர்ணம் எனும் சிறிய திருத்தேர் நிகழ்வுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

1 More update

Next Story