நினைவுகளை அறிந்து ஆறுதல் செய்யும் தேவன்


நினைவுகளை அறிந்து ஆறுதல் செய்யும் தேவன்
x
தினத்தந்தி 4 Sept 2025 5:09 PM IST (Updated: 4 Sept 2025 5:18 PM IST)
t-max-icont-min-icon

நாம் இறைவனிடத்தில் உண்மையான அன்பு வைத்து, இடைவிடாமல் அவரைத் தேடும்போது, வாழ்நாளெல்லாம் நம்மை கைவிடாமல் பாதுகாப்பார்.

அன்பானவர்களே, இறைவனாகிய இயேசு ஒவ்வொருவருடைய நினைவுகளையும், எண்ணங்களையும், சிந்தனைகளையும், செயல்களையும், நடைகளையும் அறிகிறவர்.

வேதம் சொல்கிறது: 'தாயின் கர்ப்பத்தில் நாம் உருவாவதற்கு முன்பாகவே, நம் கரு உருவாகும் நாளையும் அறிந்தவர். நாம் இந்த உலகத்தில் எந்த நாட்டில் யாருக்கு மகனாக, மகளாக பிறக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிற தேவன் அவர்.

'நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்' (எரேமியா 1:5)

'தாயின் கர்ப்பத்திலிருந்தது முதல் கர்த்தர் என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கையில் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினார்'. (ஏசாயா 49:1)

தாயின் கர்ப்பத்தில் நம்மை உருவாக்கினவர் அவரே, நமக்காக அனைத்தையும் செய்பவரும் அவரே. அவர் சர்வ வல்லமையுள்ள தேவன்.

வேதம் சொல்கிறது: “உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான, கர்த்தர் சொல்லுகிறதாவது; நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர். நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்”. (ஏசா. 44:24)

நம்முடைய நினைவுகளை தூரத்திலிருந்தே அறிகிறவர், நம்முடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றும் இறைவன் அவர். சில நேரங்களில் தாமதமானாலும் பொறுமையுடன் காத்திருந்து, முயற்சிகள் செய்யும்போது எதிர்பார்க்கும் விஷயங்களை நிறைவேற்றும் தேவன் அவர்.

“நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவை தீமைக்கல்ல, சமாதானத்துக்கு ஏதுவான நினைவுகளே”. (எரேமியா 29:11)

நாம் இறைவனிடத்தில் உண்மையான அன்பு வைத்து, இடைவிடாமல் அவரைத் தேடும்போது, வாழ்நாளெல்லாம் நம்மை கைவிடாமல் பாதுகாப்பார்.

'கர்த்தர் எல்லா இதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார், நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார். நீ அவரை விட்டு விட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்'. (1 நாளாகமம் 28:9)

சின்னச்சின்ன விஷயங்களில்கூட அவருடைய கரம் நம் மீது உள்ளது. நம்முடைய மனதில் தோன்றும் ஒவ்வொரு நினைவுகளையும், எண்ணங்களையும் அவர் அறிகிறார். அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. நம்முடைய செயல்கள், நடைகள் அனைத்தும் அவர் பார்வையில் வெட்ட வெளிச்சமாய் உள்ளது.

'என் உட்காருதலையும், என் எழுந்திருத்தலையும் நீர் அறிந்திருக்கிறீர். என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்'. (சங்கீதம் 139:2)

நான் அவர்கள் கிரியைகளையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறேன்' (ஏசாயா 66:18)

நம்முடைய நினைவுகள், ஒரு செயலாக மாறும் முன்பே, அது நல்லதா, கெட்டதா என்று உணர்த்தி, எச்சரித்து நன்மையான பாதைகளில் நடத்துகிறவர்.

'அவர் பர்வதங்களை உருவாக்கினவரும், காற்றைச் சிருஷ்டித்தவரும், மனிதனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின் மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார். சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்'. (ஆமோஸ் 4:13)

'என் கருவை உம்முடைய கண்கள் கண்டது. என் அவயங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும் உமது புத்தகத்தில் எழுதியிருந்தது'. (சங்கீதம் 139:16)

'என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்தருக்கிறீர்'. (சங்கீதம் 139:4)

'தேவனே என்னை ஆராய்ந்து, என் இதயத்தை அறிந்து கொள்ளும். என்னைச் சோதித்து என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்'. (சங்கீதம் 139:23,24)

நம் ஜீவனுள்ள எல்லாம் வேதனை உண்டாக்கும் வழிகளை வெறுக்கச் செய்து, நீதியின் பாதைகளில் நேர்மையுடன் வாழச் செய்கிற தேவன் அவர். தினந்தோறும் அவரிடம் பேசுவோம். நம்முடைய இதயத்தில் ஏதாவது வேதனை உண்டாக்கும் வழிகள் இருக்குமானால் அவைகளை விட்டு விலகிச் செல்வதற்கு அவரிடம் ஆலோசனை கேட்போம். அவர் நம் இதயத்தின் எண்ணங்களையும், நினைவுகளையும், சிந்தனைகளையும், அறிந்திருக்கிற இறைவன். ஆகவே நம்முடைய வாழ்நாளில் நமக்கு எது நல்லது, எது தேவை என்று அவருக்குத் தெரியும். அவருடைய ஆலோசனையின் படி நடப்போம். நீதிமானுடைய பாதை ராஜபாதை என்பது ஒரு பிரபலமான பழமொழி. இது வேதாகமத்தில்: “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிக அதிகமாய் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசம் போலிருக்கும்” என்று கூறுகிறது.

ஆம், கர்த்தருடைய ஆலோசனையின்படி நாம் நடந்தால் நிச்சயமாக நம்முடைய வாழ்க்கை ஆசீர்வாதமாக மாறும்.

-டாக்டர் ஒய்.ஆர்.மானெக் ஷா, நெல்லை.

1 More update

Next Story