அமர்நாத் யாத்திரை.. பனி லிங்கத்திற்கு பிரதான பூஜை செய்த கவர்னர்
பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து, அமர்நாத் குகைக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபடும்படி கவர்னர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ஆம் தேதி துவங்கி வரும் ஆகஸ்ட் 9 வரை 38 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அமர்நாத் குகையில் உருவான பனி லிங்கத்துக்கு இன்று பிரதான பூஜை செய்யப்பட்டது. சம்பிரதாயப்படி அமர்நாத் யாத்திரை தொடங்கியதை குறிக்கும் இந்த நிகழ்வில், ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா பங்கேற்று பூஜை செய்து பனி லிங்கத்தை வழிபட்டார்.
முன்னதாக, அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா ஆய்வு மேற்கொண்டார். கந்தர்பாலில் உள்ள பால்டல் அடிவாரத்தில் உள்ள அமர்நாத் கோவில் வாரியத்தின் பேரிடர் மேலாண்மை மற்றும் யாத்ரி நிவாஸ் வளாகத்தை நேரில் ஆய்வு செய்தார். மேலும், யாத்திரை பாதையை சீரமைத்து பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எல்லை சாலை அமைப்பின் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வுகள் குறித்து கவர்னர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பாபா அமர்நாத் (சிவபெருமான்) நம் அனைவருக்கும் அருள் மழையை பொழிவாராக" என கூறி உள்ளார். மேலும், ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 9 வரை திட்டமிடப்பட்டுள்ள அமர்நாத் யாத்திரையின்போது பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து, புனித குகைக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபடும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, விஸ்வ இந்து பரிஷத் சார்பில் அமர்நாத் யாத்திரைக்கான முதல் பூஜை தாவி ஆற்றங்கரையில் நடைபெற்றது.








