ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: பால்குடம், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு


ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: பால்குடம், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு
x

திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் குளிப்பதற்கு ஏதுவாக குழாய் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

மதுரை

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் கடந்த 2-ம் தேதி வைகாசி பெருந்திருவிழா தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மன் புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பால்குடம், அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பூஜை செய்து பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து அங்கிருந்து கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தைச் சுற்றி, நான்கு ரத வீதியில் வலம் வந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். உருவபொம்மை, ஆயிரங்கண் பானை, 21 அக்னிச்சட்டி, கரும்பு தொட்டிலில் குழந்தை எடுத்து வருதல், கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வருதல், அலகு குத்தி வருதல் என நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் குளிப்பதற்கு ஏதுவாக குழாய் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் வைகை ஆற்றில் இறங்கும் பகுதியில் பாதைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு கூடுதலாக மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் செல்லக்கூடிய இடங்களில் டிராக்டர்களில் வாட்டர் டேங்க் அமைத்து ரோடுகளில் தண்ணீர் தெளித்து வெயிலின் தாக்கம் தணிக்கப்பட்டது.

இன்று மாலை அம்மன் வைகை ஆற்றுக்கு சென்று அங்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு வைகை ஆற்றில் இருந்து பூப்பல்லக்கில் அம்மன் பவனி வந்து கோவிலை வந்தடையும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது

நாளை மாலை மந்தைகளம் மைதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 17-ம் தேதி திருத்தேரோட்டமும், 18-ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.

1 More update

Next Story