தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர்வெட்டு திருவிழா தொடங்கியது

டிசம்பர் 16-ம் தேதி மாலை கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர்வெட்டு திருவிழா தொடங்கியது
Published on

உடன்குடி பஞ்சாயத்து யூனியன் குதிரைமொழி பஞ்சாயத்து தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் கள்ளர் வெட்டு பெறும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை 10 மணிக்கு யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்பிரமணியம், செயல் அலுவலர் காந்திமதி, உடன்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் பாலசிங் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், பகல் 1 மணிக்கு அன்னதானமும் நடந்தது. விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜையும், வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெறும்.

விழாவில் முக்கிய நிகழ்வாக அடுத்தமாதம்(டிசம்பர்) 14-ந் தேதி பகல் 11 மணிக்கு ஐவராஜா, மாலையம்மன் பூஜையும், பகல் 12 மணி, மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையும் நடக்கிறது.

டிசம்பர் 15-ந் தேதி காலை 10 மணிக்கு மகளிர் வண்ணக் கோலமிடும் நிகழ்ச்சியும், காலை 11 மணி, பகல் 12 மணிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலியும், இரவு 7.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறும். இரவு 9 மணிக்கு உற்சவர் திருவீதி உலா சன்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

டிசம்பர் 16-ந் தேதி காலை 6 மணிக்கு கற்குவேல் அய்யனாருக்கு அபிஷேக பால் குடங்கள் ஊர்வலமும், காலை 7 மணிக்கு பேச்சியம்மன் உற்சவர் ஊஞ்சல் சேவை, காலை 9 மணிக்கு அன்னை பூர்ண பொற்கலை சமேத கற்குவேல் அய்யனார், பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தாமிரபரணி தீர்த்தம் எடுத்து வரப்படும். காலை 9.45 மணிக்கு ஊர் எல்லையில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 4.45 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் பிரசித்திப் பெற்ற கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, ஆய்வர் முத்துமாரியம்மாள், கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com