குளித்தலை: வடக்கு மாடுவிழுந்தான் பாறை அம்மன் கோவில் திருவிழா

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி விழாவில் பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தியும், அலகு குத்தி வந்தும் தீமித்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், நங்கவரம் பேரூராட்சி, வடக்கு மாடுவிழுந்தான் பாறையில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன், காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவிழா நடத்துவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு திருவிழாவில் காப்பு கட்டுதல் கரகம் பாலித்தல் நிகழ்வைத் தொடர்ந்து, முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழா (தீ குண்டத்தில் இறங்குவது) விமரிசையாக நடந்தது.
இதற்காக நங்கவரம் வாரிக்கரையில் இருந்து சாமி அழைத்து, பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிசட்டிகள் மற்றும் பால்குடம் சுமந்தும் மேளத்தாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதையடுத்து அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. புதன்கிழமை மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவடைந்தது.