ஆயிரம் முறை கோவிலுக்கு சென்ற பலனை தரும் கும்பாபிஷேக தரிசனம்

கும்பாபிஷேகம் குறித்த முகூர்த்தத்தில் நிகழ்ந்த பிறகு, 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம், மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறும்.
கோவில்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தெய்வ சக்தியை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சில சடங்குகளின் மூலம் புதுப்பிப்பது வழக்கம். இந்தச் சடங்குகளின் தொகுப்பே கும்பாபிஷேகம் அல்லது குடமுழுக்கு எனப்படுகிறது. சில கோவில்களில் புனரமைப்பு பணிகள் தாமதம், பொருளாதார நிலை உள்ளிட்ட சில காரணங்களால் கும்பாபிஷேகம் செய்வதற்கு கால தாமதம் ஆகும்.
கும்பாபிஷேகத்திற்காக புனித நீரைக் கலசங்களில் வைத்து வேத விற்பன்னர்கள் சுற்றிலும் அமர்ந்து மந்திரங்களை ஓதுவார்கள். மந்திர உச்சாடனங்கள் மூலம் கலச நீர் மந்திர சக்தி நிறைந்ததாக மாறும். பின்னர் அந்தப் புனித நீர் மூலம் தெய்வச் சிலைகளையும் கோவில் மேல் உள்ள கலசங்களையும் நீராட்டுவர். தெய்வச் சிலைகளும் கலசங்களும் இந்த மந்திர நீரால் அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு புதிய சக்தி பெறும்.
கும்பாபிஷேக நன்னீரை பக்தர்கள் மீதும் தெளிப்பார்கள். அந்தப் புண்ணிய தீர்த்தம் மேனியில் பட்டால் பல பிறவியில் செய்த பாவங்கள் எல்லாம் அகன்றுவிடும் என்பது நம்பிக்கை.
ஆயிரம் முறை கோவிலுக்குப் போய் வழிபட்டு அடையும் பலனை விட, ஓர் ஆலய கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டால் கிடைக்கும் பலன் அதிகம் என்று சொல்வதுண்டு. கும்பாபிஷேகத் திருவிழாவைக் கண்டு தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைப்பது பாக்கியமாகும்.
கோவில்களில் நடைபெறும் விசேஷங்களில் கும்பாபிஷேகம் மிக முக்கியமானது. கும்பாபிஷேகத்திற்கென்றே நிகழ்த்த வேண்டிய வேள்விகள் உண்டு. வேள்விகளை நிகழ்த்துவதில் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அதை நிகழ்த்துவார்கள். வேள்விகளை நிகழ்த்துவதற்காக வேள்விச் சாலைகள் அமைக்கப்படும். வேள்விச் சாலைகளை எப்படி அமைக்க வேண்டும்?, அவற்றின் வடிவமைப்பு, அகல நீளங்கள் என எல்லாவற்றுக்கும் விதிமுறைகள் உள்ளன.
இவ்வாறு அனைத்து சாஸ்திர சம்பிரதாயங்களும் பின்பற்றப்பட்டு கும்பாபிஷேகம் குறித்த முகூர்த்தத்தில் நிகழ்ந்த பிறகு, 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம், மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறும்.
அவ்வகையில் நாளைய தினம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை இசக்கியம்மன் கோவில், மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர சாமி கோவில், காஞ்சீபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன் கோவில், தென்காசி மாவட்டம் கடையம் நித்திய கல்யாணி அம்மன் கோவில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சின்னமலை யோக ஆஞ்சநேய சாமி கோவில் உள்பட 113 கோவில்களில் கும்பாபிஷேகம் நடக்கிறது.