தீர்த்தகிரி மலையில் 92 அடி உயர பிரம்மாண்ட முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்

டிரோன்கள் மூலம் நான்கு திசைகளிலும் இருந்து புனித நீர் ஊற்றி பூக்கள் தூவப்பட்டன.
வேலூர், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடாபுரம் அடுத்த புதுவசூர் தீர்த்தகிரி மலையில் பல நூறு ஆண்டு பழமையான வடிவேல் சுப்பிரமணிய சாமி கோவில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு முன்பாக 92 அடி உயரத்தில் மிகப்பிரமாண்டமான முருகன் சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் ஸ்தபதி இந்த சிலையையும் வடிவமைத்துள்ளார். தென் வடக்கு திசையை பார்த்தவாறு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த முருகன் சிலை மலை உச்சியில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று அதிகாலையில் யாக சாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. பூஜை நிறைவடைந்தபின், பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களை வாணவேடிக்கை, மேள தாளங்கள் முழங்க கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று, முதலில் வடிவேல் சுப்பிரமணிய சுவாமி கோவில் கோபுரத்தின் மீதுள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் மூலவர்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கோவில் எதிரே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 92 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. டிரோன்கள் மூலம் நான்கு திசைகளிலும் இருந்து புனித நீர் ஊற்றி பூக்கள் தூவப்பட்டன. கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'முருகனுக்கு அரோகரா' என்ற பக்தி முழக்கத்துடன் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.