திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் லட்ச குங்குமார்ச்சனை

பிரம்மோற்சவத்துக்கு முன்பு பத்மாவதி தாயாரின் ஆசியை பெறுவதற்காக லட்ச குங்குமார்ச்சனை நடத்தப்படுகிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி நேற்று லட்ச குங்குமார்ச்சனை நடந்தது.
குங்குமம், குங்குமப்பூ இந்து சனாதன தர்மத்தில் முக்கிய மங்கள பொருட்களாகக் கருதப்படுகிறது. திருமணமான பெண்கள் தங்களது நெற்றியில் குங்குமத்தை பூசி, தனது கணவனுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும், என வேண்டி இறைவனை நாடுவதாக நம்பப்படுகிறது.
செந்தூரம் அல்லது குங்குமம் தெய்வீக பெண்களுடைய ஆற்றலின் அடையாளமாகக் கருதப்படுகிறது. லட்சுமி, சரஸ்வதி மற்றும் பார்வதி தேவியர்களுடன் தொடர்புடையது.
ஒரு பாரம்பரிய நடைமுறையாக ஒவ்வொரு ஆண்டும் கோவிலில் முக்கிய திருவிழாவாக பிரம்மோற்சவத்துக்கு முன்பு அனைத்துச் சடங்குகள் மற்றும் நிகழ்ச்சிகள் சீராகவும் வெற்றிகரமாகவும் நடக்க வேண்டி பத்மாவதி தாயாரின் ஆசியை பெறுவதற்காக, அர்ச்சகர்கள் லட்ச குங்குமார்ச்சனையை நடத்துகிறார்கள்.
அதன்படி கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை அர்ச்சகர்கள் லட்ச குங்குமார்ச்சனையை நடத்தினர். அதற்காக கோவிலில் இருந்து உற்சவர் பத்மாவதி தாயாரை மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்துக்கு கொண்டு சென்று அங்குள்ள மேடையில் உற்சவரை அமர்த்தினர்.
தொடர்ந்து ஆகம சாஸ்திர முறைபடி குங்குமார்ச்சனை நடத்தப்பட்டது. குங்குமார்ச்சனையின்போது அர்ச்சகர்கள் லட்சுமி அஷ்டோத்தரம் மற்றும் லட்சுமி சஹஸ்ர நாமம் ஓதி பத்மாவதி தாயாருக்கு குங்குமத்தை சமர்ப்பித்தனர்.
நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத், பஞ்சராத்ர ஆகம ஆலோசகர் மணிகண்ட பட்டர், அர்ச்சகர் பாபுசாமி உள்பட அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.






