ஆவணி மூலத்திருவிழா.. சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் கோலாகலம்: நவரத்தின செங்கோல் ஏந்தினார்


ஆவணி மூலத்திருவிழா.. சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் கோலாகலம்: நவரத்தின செங்கோல் ஏந்தினார்
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்துவரும் ஆவணி மூலத்திருவிழாவில் சுந்தரேஸ்வரருக்கு ராயர் கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை.

சிவபெருமான் மதுரையில் நடத்திய 64 திருவிளையாடல்களில், 12 திருவிளையாடல்களை விளக்கும் திருக்கோலங்களில் ஆவணி மூலத்திருவிழாவின்போது சுந்தரேஸ்வரர் காட்சி அளிப்பது சிறப்பானதாகும். சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கும், ஆவணி மூலத்திருவிழாவில் சுந்தரேஸ்வரருக்கும் முடி சூட்டப்படும்.

அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. நாள்தோறும் வெவ்வேறு திருக்கோலங்களில் சுவாமி காட்சி அளித்து வருகிறார்.

பட்டாபிஷேகம்

அவ்வகையில் விழாவின் 7-ம் நாளான நேற்று காலையில் வளையல் விற்ற திருவிளையாடலை விளக்கும் திருக்கோலத்தில் எழுந்தருளினார். சிகர நிகழ்ச்சியாக சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் வைபவம் நேற்று இரவு நடந்தது. அப்போது சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேஸ்வரர்- மீனாட்சி அம்மன் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு 7.40 மணிக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் சுவாமியிடமிருந்து செங்கோலை அவரது பிரதிநிதியாக மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் பெற்று 2-ம் பிரகாரத்தை வலம் வந்தார். பின்னர் அந்த செங்கோலை சுவாமியின் திருக்கரத்தில் சமர்ப்பித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனின் பட்டாபிஷேக கோலத்தை தரிசனம் செய்தனர்.

சுவாமியின் அருளாட்சி

மதுரையில் சித்திரை முதல் ஆடி வரை நான்கு மாதங்கள் மீனாட்சி அம்மனும், ஆவணி முதல் பங்குனி மாதம் வரை 8 மாதங்கள் சுந்தரேசுவரரும் ஆட்சி புரிவதாக ஐதீகம். அதன்படி சுந்தரேஸ்வரரின் அருளாட்சி நேற்று முதல் தொடங்கியது.

1 More update

Next Story