மகா தீபம் நிறைவு: 2,668 அடி உயர மலை உச்சியில் இருந்து இறக்கப்பட்ட தீப கொப்பரை


மகா தீபம் நிறைவு: 2,668 அடி உயர மலை உச்சியில் இருந்து இறக்கப்பட்ட தீப கொப்பரை
x

தீப கொப்பரையை கொண்டு வரும் வழிநெடுகிலும் பக்தர்கள் அதனை தொட்டு வணங்கினர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 3-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று அதிகாலை வரை 11 நாட்கள் பக்தர்களுக்கு மகா தீபம் காட்சியளித்தது.

தீபத்திருவிழாவின் போது திருவண்ணாமலைக்கு நேரில் வந்து மகா தீபத்தை தரிசிக்க இயலாத பக்தர்கள் மகா தீபத்தை காண நேற்று முன்தினம் இரவு வரை திருவண்ணாமலைக்கு வருகை தந்து தீப தரிசனம் செய்தனர்.இந்த நிலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை 2,668 அடி மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. முன்னதாக மலை உச்சியில் மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூைஜ நடைபெற்றது.

இதையடுத்து சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் தீப கொப்பரையின் பக்கவாட்டில் கம்புகள் மற்றும் கயிறு கட்டி தோளில் சுமந்த படி பயபக்தியுடன் கீழே இறக்கி கொண்டு வந்தனர். மலையில் இருந்து கோவிலுக்கு தீப கொப்பரையை கொண்டு வரும் வழிநெடுகிலும் பக்தர்கள் அதனை தொட்டு வணங்கினர். தொடர்ந்து கோவிலில் மாலை தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

வருகிற ஜனவரி மாதம் 3-ந் தேதி ஆருத்ரா தரிசனத்தன்று தீபச்சுடர் மை (தீப மை) அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு வைக்கப்படும். அதன் பின்னர் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தீப மை பிரசாதம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

1 More update

Next Story