திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

மலர் அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்பாள்
மண்டல பூஜை நிறைவு விழாவில் முருகப்பெருமானின் தங்கவேலுக்கு புனித நீரால் மகா அபிஷேகம் நடந்தது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 14-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மறுநாள் 15-ந்தேதி முதல் மண்டல பூஜை தொடங்கி நடந்து வந்தது. நாளையுடன் கும்பாபிஷேகம் நடந்து 48 நாட்கள் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் நேற்று மண்டல பூஜை நிவர்த்தி செய்யப்பட்டது.
இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தில் 5 குண்டங்கள் அமைக்கப்பட்டு 50 கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு தயார் செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. இந்த நிலையில் நேற்று 2-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட கலசங்கள் கோவிலின் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதனையடுத்து அறங்காவலர் குழு தலைவர் ப.சத்யபிரியா பாலாஜி தலைமையில் அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், நா.மணிச்செல்வன், கோவில் துணை கமிஷனர், எம்.சூரியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் கற்பக விநாயகர், துர்க்கை அம்பாள், பவளக்கனிவாய் பெருமாள் சன்னதியில் கலசத்தில் இருந்து புனிதநீர் தெளிக்கப்பட்டது. மேலும் சத்யகிரீஸ்வரருக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
முருகப்பெருமானின் திருமேனியில் புனிதநீர் தெளிக்கப்பட்டது. மேலும் முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள தங்கவேலுக்கும் கலசத்தில் இருந்த புனித நீரால் மகா அபிஷேகம் நடந்தது. அப்போது பக்தி கோஷங்கள் எழுப்பி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சண்முகர் சன்னதியில் வள்ளி, தெய்வானை சமேத சண்முக பெருமானுக்கும், உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம், மகா தீப, தூப, ஆராதனை நடந்தது.






