மாதா கோவில் திருவிழா இன்று ஆரம்பம்.. வேளாங்கண்ணியில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்


மாதா கோவில் திருவிழா இன்று ஆரம்பம்.. வேளாங்கண்ணியில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
x

வேளாங்கண்ணி கடற்கரை சாலையில் திரண்டிருந்த மக்கள்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி 7.9.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

நாகப்பட்டினம்

புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நடக்கிறது. விழாவில் பேராலய அதிபர், பங்கு தந்தைகள், உதவி பங்குதந்தைகள் அருட்சகோதரிகள் கலந்துகொள்கிறார்கள். விழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.

தேர் பவனி

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி அடுத்த மாதம்(செப்டம்பர்) 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

பிறந்தநாள் விழா

8-ந் தேதி (திங்கட்கிழமை) புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர். வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து மாற்றம்

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்தையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) 2 நாட்கள் வேளாங்கண்ணியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு பஸ் வழித்தடம்

திருச்சி, தஞ்சாவூர், திருவாரூரில் இருந்து வரும் அனைத்து அரசு பஸ்களும் நாகப்பட்டினம், புத்தூர் ரவுண்டானா, பாப்பாகோவில், பறவை, வேளாங்கண்ணி சுனாமி நினைவு வளைவு வழியாக உள்ளே சென்று செயின்ட் மேரிஸ் தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட வேண்டும்.

பின்பு அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பூக்காரத்தெரு, கொள்ளந்திடல் கிழக்கு தெரு, தெற்கு பொய்கை நல்லூர் வழியாக பறவை சென்று கிழக்கு கடற்கரை சாலை, புத்தூர் ரவுண்டானா வழியாக வெளியே செல்ல வேண்டும்.

தனியாா் பஸ்கள்

திருச்சி, தஞ்சாவூர், திருவாரூரில் இருந்து வரும் அனைத்து தனியார் பஸ்கள் மற்றும் இலகு ரக வாகனங்களும் புத்தூர் ரவுண்டானா, கிழக்கு கடற்கரை சாலை, ஏறும் சாலை வழியாக ஒரத்தூர் பிரிவு சாலை வலது புறமாக திரும்பி செல்லவேண்டும்.

அங்கிருந்து வடவூர், நிர்த்தனமங்கலம், கிராமத்து மேடு, கருங்கண்ணி, மேலப்பிடாகை வழியாக இடது புறமாக திரும்பி திருப்பூண்டி, செருதூர் ஆற்றுபாலம் வழியாக செயின்ட் பீட்டர்ஸ் வாகனம் நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். பக்தர்கள் அங்கிருந்து பேராலயத்திற்கு சென்று மீண்டும் அதே வழியாக வெளியே செல்ல வேண்டும்.

ஆட்டோக்கள்

இன்று(வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை(சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் அனைத்து ஆட்டோக்களும் செருதூர் பழைய பாலத்திலிருந்து செருதூர் புதிய பாலம் வரை பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும்.

யாத்ரீகர்கள் நலன் கருதி இன்று முழுமையாக இரவு 12 மணி வரை எந்த விதமான வாகனங்களும் மெயின் ஆர்ச்சிலிருந்து ஆலயத்தினை சுற்றியுள்ள கடைகள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் மற்ற இடங்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது.

அவசர ஊர்தி

ஆம்புலன்ஸ், போலீஸ்துறை, தீயணைப்புதுறை வாகனங்கள் சென்று வருவதற்கு பொதுமக்களும், பக்தர்களும் ஒத்துழைப்பு தர போலீசார் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாளை (சனிக்கிழமை) காலை வரை சரக்கு வாகனங்கள் வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்து செல்லாமல், வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வரும் அனைத்து சரக்கு வாகனங்களும் திருப்பூண்டி, மேலப்பிடாகை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாருர், கங்களாஞ்சேரி, நாகூர் வழியாக செல்ல வேண்டும்.

சரக்கு வாகனங்கள்

நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களும் நாகூர், கங்களாஞ்சேரி, திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வழியாக செல்ல வேண்டும்.

சென்னையில் இருந்து வேதாரண்யம் செல்ல வேண்டிய அனைத்து சரக்கு வாகனங்களும் வாஞ்சூர் சந்திப்பு, திருவாரூர், கங்களாஞ்சேரி வழியாக செல்ல வேண்டும்.

இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story