மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்


மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
x

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா கோலாகலமாக நடைபெற்றது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரியை யொட்டி மாசிப்பெருவிழா 13 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.

விழாவின் 2-ம் நாளான நேற்று மயானக்கொள்ளை நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷ அங்காளி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு வடக்கு வாசல் வழியாக சென்று சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பூசாரிகள் கோவிலின் உட்பிரகாரத்தில் பூஜை செய்து வாசலில் கட்டி இருந்த திரையை தீ வைத்து எரித்தவுடன் பிரம்ம கபாலத்துடன் (கப்பரை முகம் என்று அழைப்பார்கள்) ஆடியபடி மயானம் நோக்கி சென்றனர். பின்னர் காலை 10.35 மணிக்கு அம்மன் பம்பை, உடுக்கை, மேளதாளம் முழங்க மயானம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டார். அப்போது பக்தர்கள் பலர் அம்மன் வேடம் அணிந்து சென்றனர்.

11 மணிக்கு மயானத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதையடுத்து அங்கு மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு பக்தர்கள் குவித்து வைத்திருந்த சுண்டல், கொழுக்கட்டை, காய்கறிகள், பழங்கள், சில்லரை நாணயங்கள், தானியங்கள் ஆகியவற்றை பூசாரிகள் வாரி இறைத்தனர்.

தொடர்ந்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அம்மன் வேடம் அணிந்து ஆடியபடியும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சில பக்தர்கள் கோழிகளை கடித்தப்படி வந்தனர். அப்போது பக்தர்கள், உடல் நலம் பெற வேண்டி வரிசையாக படுத்துக்கொண்டனர். அவர்கள் மீது அம்மன் வேடமணிந்த பக்தர்கள் ஏறி மிதித்தபடி சென்றனர். இதையடுத்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டதும் கோவிலை வலம் வந்து உட்பிரகாரத்துக்கு சென்றார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் அம்மன் ஆண் பூதவாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

முன்னதாக மயானத்தில் உள்ள மயானக்காளிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து மேல்மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் பூசாரி, அறங்காவலர்கள் சுரேஷ் பூசாரி, ஏழுமலை பூசாரி, பச்சையப்பன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழாவின் 3-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் தங்க நிற மரப்பல்லக்கிலும், இரவு பெண் பூத வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கிறது. மேலும் விழாவின் சிகர நிகழ்ச்சிகளாக வருகிற 2-ந்தேதி தீமிதி திருவிழாவும், 4-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

1 More update

Next Story