மேலூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் நகரில் காமாட்சி அம்மன் உடனுறை கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. மேலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு மேலூர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் அதிக அளவில் வருகை தந்து வழிபடுகிறார்கள். இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் அதிகளவு திருமணங்கள் நடைபெறும்.
இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 25 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த ஆண்டு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆறு மாதங்களுக்கு முன்பு சாமிகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின. கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் முருகன் தலைமையில் ஏராளமான தன்னார்வலர்கள் முன்வந்து பல்வேறு திருப்பணிகளை செய்தனர். இதன் மூலம் கோவில் புதுப்பொலிவு பெற்றது.
திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தொடங்கின. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் முன்பு பிரமாண்டமான அளவில் யாகசாலை அமைக்கப்பட்டது. இதில் கடந்த சனிக்கிழமை அன்று கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி இன்று காலை வரை ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.
யாகசாலை பூஜைகளில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகள் நிறைவடைந்த பின் இன்று காலை 10 மணியளவில் வானில் கருட பகவான் வட்டமிட, காமாட்சி அம்மன், கல்யாண சுந்தரேஸ்வரர் ராஜகோபுரம், அதனை தொடர்ந்து விநாயகர், முருகன் சன்னதி கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.






