மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்- ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்- ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x

பங்குனி திருவிழாவில் தினமும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு பங்குனி திருவிழா கடந்த 3-ம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் வாகன சேவைகள் நடைபெறுகின்றன. வெள்ளி சூரிய பிரபை, வெள்ளி சந்திர பிரபை, வெள்ளி பூத வாகனம், நாக வாகனம், சவுடல் விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. காலை 6 மணியளவில் இறைவன் தேருக்கு எழுந்தருளினார். அதன்பின் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். மாலையில் தேரில் இருந்து சுவாமி திருக்கோவிலுக்கு எழுந்தருள்கிறார்.

நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி அளவில் திருஞானசம்பந்த சுவாமிகள் எழுந்தருளல், என்பை பூம்பாவையாக்கி அருளல், தொடர்ந்து அன்று மாலை 3.30 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி நடக்கிறது.


Next Story