மைசூரு தசரா திருவிழா: வானை வண்ணமயமாக்கிய 3,000 டிரோன்கள்

டிரோன்கள் மூலம் வானில் மயில், புலி, மீன், ராணுவ வீரர் உள்ளிட்ட உருவங்கள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டன.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் தசரா திருவிழா உலகப்புகழ் பெற்றது. கடந்த 1610-ம் ஆண்டு தொடங்கி இதுவரையில் 414 தசரா விழாக்கள் முடிந்துள்ளது. தற்போது நடந்து வருவது 415-வது ஆண்டு தசரா விழா ஆகும். ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடக்கும்.
ஆனால் இந்த ஆண்டு மைசூரு அரண்மனை குடும்பத்தினர் சந்திர நாட்காட்டி மற்றும் பஞ்சாங்கப்படி தசரா விழாவை 11 நாட்கள் கொண்டாடுவோம் என்று அறிவித்தனர். அதன்படி தசரா விழா செப்டம்பர் 22-ந் தேதி தொடங்கி அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான தசரா விழா கடந்த மாதம்(செப்டம்பர்) 22-ந் தேதி தொடங்கியது.
மைசூரு சாமுண்டி மலையில் அமைந்திருக்கும் சாமுண்டீஸ்வரி கோவிலில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மன் வெள்ளி தேரில் எழுந்தருள, புக்கர் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பானு முஷ்தாக் அம்மன் மீது பூக்களை தூவி தசரா விழாவை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு தசரா விழாக்களும் தொடங்கி நடைபெற்று வந்தன.
குழந்தைகள் தசரா, பெண்கள் தசரா, விவசாயிகள் தசரா, உணவு திருவிழா, இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், திரைப்பட விழா, தசரா மலர் கண்காட்சி, விமான சாகச கண்காட்சி, மல்யுத்த போட்டி, முதல்-மந்திரி விளையாட்டு போட்டிகள், புத்தக கண்காட்சி, கவி அரங்கம், சங்கீத நிகழ்ச்சிகள், கோலப்போட்டி, கேக் மேளா, தரங்கா சவாரியில் தம்பதிகள் ஊர்வலம், பரம்பரை நடை, பால் கறக்கும் போட்டி, மாரத்தான் போட்டி, இளைஞர் தசரா, யோகா தசரா, இசைக்கச்சேரி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக மைசூரு மானச கங்கோத்திரி திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற இசை திருவிழா மக்களை வெகுவாக கவர்ந்தது.
இப்படி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடந்த மைசூரு தசரா விழாவை இதுவரை சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் கண்டுகளித்துள்ளனர். இந்த நிலையில், திருவிழாவின் ஒரு பகுதியாக சுமார் 3 ஆயிரம் டிரோன்களை வைத்து வானில் வேடிக்கை காட்டப்பட்டது. டிரோன்கள் மூலம் வானில் மயில், புலி, மீன், துர்க்கையம்மன், கிருஷ்ண பகவான், ராணுவ வீரரின் உருவம் ஆகியவை தத்ரூபமாக உருவாக்கப்பட்டன. இதனை பொதுமக்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.






