ராசிபுரத்தில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா

63 நாயன்மார்கள், கைலாசநாதர், பிச்சாடனர், முருகர் ஆகிய உற்சவ தெய்வங்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 63 நாயன்மார்கள் விழா இந்த (ஆடி) மாதம் சுவாதி நட்சத்திரத்தில் நடைபெற்றது. மூன்று நாட்களாக விழா நடைபெற்று வந்தது.
ஒவ்வொரு நாளும் நாட்டிய நிகழ்ச்சி ,சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. விநாயகர், முருகர், நந்தியம்பெருமான் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், திருமுறை பாராயணம் நடைபெற்றது.
நேற்று இரவு மேளதாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் நாயன்மார்கள் திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், 63 நாயன்மார்கள் உற்சவ திருமேனி, கைலாசநாதர், பிச்சாடனர், முருகர் ஆகிய உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி நகரின் முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிவனடியார்கள் ஆடிப் பாடி ஊர்வலமாகச் சென்றனர். வள்ளி கும்மி நடன குழு, வல் வில் ஓரி சிலம்பாட்ட குழு நிகழ்ச்சி நடைபெற்றது. வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சவமூர்த்திகளை தரிசனம் செய்தனர்.






