விழுப்புரம்: ஏழை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

புதுவை வில்லியனூர் அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் பெரம்பை கிராமத்தில் உள்ள ஏழை மாரியம்மன் கோவில் மூன்றாம் ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி 19ம் தேதி ஐயனாரப்பன் ஆலயத்தில் ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்றிரவு விநாயகர், முருகன், ஐயனாரப்பன், பூரண, பொற்கலை சுவாமிகளின் வீதியுலா நடந்தது.
20ஆம் தேதி (நேற்று) மதியம் அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு கூழ் மற்றும் கஞ்சி வார்த்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து மாலை நடைபெற்ற செடல் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு செடல் குத்தி வேண்டுதலை நிறைவேற்றினர். பிறகு இரவு காத்தவராயன் சுவாமிக்கு கும்பம் படைத்தல் நிகழ்ச்சியும், சுவாமி வீதியுலாவும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். தேர் திருவிழாவினை உற்சாகமாக வரவேற்கும் விதமாக, தாரை தப்பட்டை அடித்து, வாணவேடிக்கை, மானாட்டம், ஒயிலாட்டம், பிரம்மாண்ட இசை முழங்க, ஆடிப்பாடி மகிழ்ந்தனர். விழாவிற்கான ஏற்பாட்டை பெரம்பை கிராம மக்கள் செய்திருந்தனர்.






