பழனி: ஆயக்குடி சோளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

ஆயக்குடி சோளீஸ்வரர் கோவிலில் ரூ.70 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பழனி அருகே உள்ள ஆயக்குடி பகுதியில் மிக பழமை வாய்ந்த சோளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இக்கோவிலில் இதுவரை கும்பாபிஷேகம் செய்ததற்கான எந்த சான்றும் இல்லை. எனவே கோவில் நிர்வாகம் சார்பில் இக்கோவிலில் முதல்முறையாக கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.70 லட்சம் மதிப்பில் கோவிலில் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்றன.
அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜை நேற்று தொடங்கியது. இன்று காலையில் யாக பூஜைகள் நிறைவடைந்து தீபாராதனை நடந்தது. பின்பு புனிதநீர் வைத்த கலசங்கள் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து 7.15 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அதையடுத்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
பின்பு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.






