தமிழகத்தில் 'குருத்தோலை ஞாயிறு' கோலாகலம் - கிறிஸ்தவர்கள் பவனி

குருத்தோலை பவனியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, பாடல்களைப் பாடி ஊர்வலமாக சென்றனர்.
சென்னை,
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அவர் ஜெருசலேம் நகருக்குள் வெற்றிகரமாக நுழைந்ததை நினைவுகூரும் வகையில் 'குருத்தோலை ஞாயிறு' கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு புனித நூலான பைபிளின் நற்செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேம் நகர மக்கள் பனைமரக் கிளைகளை அசைத்தும், சாலையில் அங்கிகளை விரித்தும் இயேசு கிறிஸ்துவை வரவேற்றதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதனை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 'குருத்தோலை ஞாயிறு' தினத்தை கொண்டாடுகின்றனர்.
'குருத்தோலை ஞாயிறு' என்பது புனித வாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த புனித வாரம் ஈஸ்டர் பண்டிகையுடன் நிறைவு பெறுகிறது. 'குருத்தோலை ஞாயிறு' தினத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி மேற்கொள்கின்றனர்.
அந்த வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று 'குருத்தோலை ஞாயிறு' கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் கிறிஸ்தவ மக்கள் ஒன்றுகூடி இறைவழிபாட்டில் ஈடுபட்டனர். பின்னர் கையில் குருத்தோலைகளை ஏந்தியபடி பவனி மேற்கொண்டனர்.
இதே போல், ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் 'குருத்தோலை ஞாயிறு' கடைபிடிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள், குருத்தோலைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
காரைக்காலில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, பாடல்களைப் பாடி ஊர்வலமாக சென்றனர். அதே போல், ராமநாதபுரத்தில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கைகளியில் ஏந்தி, ஊர்வலமாக சென்று தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.






