வள்ளிமலை அருகே ராமர் உற்சவம்.. திரளான பக்தர்கள் தரிசனம்

எருக்கம்பட்டு கிராமத்தில் 3 நாட்கள் ராமர் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு 3 நாட்கள் ராமர் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் பிரமாண்டமாக ராமர் உற்சவ திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி எருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு ராமருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு ராமபிரானை வழிபட்டனர்.
மாலையில் புஷ்ப பல்லகில் ராமர், சீதாலட்சுமி, லட்சுமணர் உற்சவர்கள் எழுந்தருளி, கிராம முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவீதி உலாவின்போது கேரளா நையாண்டி மேளத்துடன் பிரமாண்டமான வாணவேடிக்கை நடைபெற்றது.






