கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்!


கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்!
x

நாம் எப்போதும் துன்பத்தோடும், துயரத்தோடும், கவலையோடும், கண்ணீரோடும் அல்ல; நாம் நிறைவான மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமென்றே கடவுள் விரும்புகிறார்.

மனித மனங்களை உற்சாகமூட்டுகிற, இலகுவாக்குகிற, கருணை மிகுந்தவர்களாக மாற்றுகின்ற நற்காரணிகளில் ஒன்று நகைச்சுவை.

அரசர் சாலமோன் “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு, வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு” என்று சொல்லி; பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதை பிடுங்க ஒரு காலமுண்டு; கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு; இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு; அழ ஒரு காலமுண்டு என்று சொல்லி வருகின்றவர் பல்லாண்டுகளுக்கு முன்பே, நகைத்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து 'நகைக்க ஒரு காலமுண்டு' (பிரசங்கி.3:1-4) என்கிறார்.

ஆனால், உண்மையான மகிழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமாயிருக்கிற இயல்பான, நல்ல நகைச்சுவை உணர்வை நாம் தொலைத்துவிட்டோம். பணிச்சுமை, பொருளீட்டும் வேட்கை போன்றவற்றினால் மனஇறுக்கமான சூழலில், வாழ்வின் உண்மையான நோக்கத்தை இழந்துவிட்டோம். இதனால் மனநோய்களின் பாதிப்பு அதிகமாகிவிட்டது.

மனமகிழ்ச்சி நல்ல மருந்து

'மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம்' (நீதி மொழிகள்.17:22). ஆம், மனமகிழ்ச்சி நல்ல மருந்துதான். சிரிப்பு பல்வேறு நோய்களுக்கு அரு மருந்தாக இருக்கின்றது, பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கின்றது என்பதை அறிவியல்பூர்வமாகவே நிரூபித்துள்ளனர். திருமறையில் நகைச்சுவை உணர்வில் சிறந்த தம்பதிகளாக ஆபிரகாம்-சாராளைச் சொல்லலாம். கடவுள் ஆபிரகாமிடம், 'நான் சாராளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன். அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன்' என்று சொன்னபோது, ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து, நூறு வயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ?' என்று தன் இதயத்திலே சொல்லிக் கொண்டார் (ஆதி யாகமம்.17:16,17) என்று வாசிக்கின்றோம்.

இதே விஷயத்தை சாராளிடத்தில் சொன்னபோது சாராள் தன் இயலாமையை உணர்ந்து, 'சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்' (ஆதியாகம்.18:12).

ஆபிரகாமின் நூறு வயதில் அவர்களுக்கு பிறந்த பிள்ளைக்கு, 'தேவன் என்னை நகைக்கப்பண்ணினார். இதைக் கேட்கிற யாவரும் என்னோடே கூட நகைப்பார்கள்' என்று சொல்லி அவனுக்கு 'ஈசாக்கு' என்று பேரிட்டனர். 'ஈசாக்கு' என்றால் 'சிரித்தல்' என்று பொருள்.

இறைவன் விரும்பும் நற்குணம்

“ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்' (சங்கீதம்.37:13), 'பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்' (சங்கீதம்.2:4) என்கிறார் அரசர் தாவீது. 'அவர் குற்றமில் லாதவரின் சோதனையைப் பார்த்து நகைக்கிறார்' (யோபு.9:23) என்கிறார் பக்தன் யோபு.

நம்மைப் படைத்த கடவுளின் நற்பண்புகளில் ஒன்று நகைத்தலும் ஆகும். திருமறையில் மகிழ்ச்சியின் ஆரவாரம் நிறைந்த கம்பீரச் சிரிப்பு, ஏளனமான சிரிப்பு, நம்ப முடியாத சிரிப்பு போன்றவை குறிப்பிடப்படுகிறது. நாம் எப்போதும் துன்பத்தோடும், துயரத்தோடும், கவலையோடும், கண்ணீரோடும் அல்ல; நாம் நிறைவான மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமென்றே கடவுள் விரும்புகிறார். எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்' (1 தெசலோனிக்கேயர் 5:16). 'கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்' (பிலிப்பியர்.4:4) என்கிறார் தூய பவுலடிகளார்.

இறையன்பை பகிரும் நற்செயல்

'மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்' (நீதிமொழிகள்.15:13). மனமகிழ்ச்சியாய் இருத்தல் என்பதே கடவுள் அருளிய உன்னதமான வாழ்வின் மகத்துவத்தை உணர்ந்து, அவருக்கு நன்றி செலுத்துவதின் அடையாளமாகும். கடவுள் நம் வாழ்வில் செய்த நன்மைகளை உணர்ந்து, கடவுளின் அன்பை, நற்சாட்சி மிகுந்த வாழ்வின் தேவையை, நற்செய்தியை பிறருக்கு எடுத்துரைப்பதற்கான எளிய வழிமுறையாகும். நிறைவான சந்தோஷத்தை, ஒருவராலும் எடுத்துப்போட முடியாத சந்தோஷத்தை தம் சீடர்களுக்கு அருளப் போவதாக ஆண்டவர் வாக்களித்தார். ஆண்டவருடைய ஊழியத்தை செய்து வந்த 'சீடர்கள் பரிசுத்த ஆவியினாலும், சந்தோஷத்தினாலும் நிரப்பப்பட்டார்கள்' (அப்போஸ் 5. 13:52).

சந்தோஷத்தோடே ஆண்டவருடைய வார்த்தையை சீடர்கள் பகிர்ந்தார்கள். மக்களும் மிகுந்த உபத்திரவத்திலேயும், பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, அப்போஸ்தலர்களையும், கர்த்தரையும் பின்பற்றுகிறவர்கள் ஆனார்கள்.

ஆதலால் தான் தூய பவுலடிகளார், 'உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்கு சகாயராயிருக்கிறோம்' (2 கொரிந்தியர் 1:24) என்கிறார்.

உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்

பிரியமானவர்களே, கலங்காதீர்கள்! 'இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள், இனி நகைப்பீர்கள்' (லூக்கா.6:21). 'உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்' என்று கடவுள் நமக்கு வாக்கு தந்திருக்கின்றார். இப்பொழுது உங்களுக்கு இருக்கிற பாடுகளை நினைத்து வருந்தாமல், கடவுள் தாம் வாக்களித்திருக்கிற நிறைவான, உலகத்தால் தரமுடியாத, ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாத சந்தோஷத்தை அவர் நமக்குத் தருவாரென்ற நம்பிக்கையுடன் வாழ்வோம்.

'அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்' (எபிரெயர் 12:2).

- அருட்பணி ம.பென்னியமின், தோட்டப்பாளையம், வேலூர்.

1 More update

Next Story