சங்கரன்கோவிலில் சித்திரை திருவிழா: பச்சை சாத்தி பக்தர்களுக்கு காட்சியளித்த நடராஜர்

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கர நாராயணர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் சித்திரை திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நேற்று இரவு சுவாமி, அம்பாள், நடராஜர், முதல் மூவர்கள் சிவப்பு சாத்தி அலங்காரத்திலும், நடு இரவில் நடராஜர் வெள்ளை சாத்தி அலங்காரத்திலும் காட்சி அளித்தனர். இன்று காலையில் நடராஜர் பச்சை சாத்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. தொடர்ந்து ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் நடக்கிறது. இதில் மூன்று தேர்கள் இழுக்கப்படும். விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனியாக திருத்தேர்களில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.






