நவராத்திரியின் மற்ற நாட்களை விடுங்க.. இந்த ஒரு நாளாவது பூஜை செய்யுங்க..!

சரஸ்வதி தேவியை வழிபடுவதால் கல்வி, கலைகள், செய்யும் தொழில்கள் வளர்ச்சி அடையும் என்பது நம்பிக்கை.
கல்வி மற்றும் கலைக்குரிய தெய்வமாக கருதப்படும் சரஸ்வதி தேவியை வழிபடும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகும். குறிப்பாக, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், தொழிலில் வளர்ச்சி அடையவும் சரஸ்வதியை வணங்கி வழிபடுகிறார்கள்.
சரஸ்வதி பூஜையின் சிறப்பு
கிருதயுகத்தில் சுகேது என்ற மன்னன் இருந்தார். அவர் மனைவி சுதேவி. இவள் மிகுந்த தெய்வபக்தி கொண்டவளாக இருந்தாள். சுகேது, நல்ல முறையில் ஆட்சி செய்துவந்தார். இருப்பினும், பகைமை கொண்ட உறவினர்கள் ஒன்றுசேர்ந்து, சுகேதுவை வீழ்த்த எண்ணினர். அவர்கள் பெரும் படையுடன் வந்து போரிட்டனர். உறவினர்களின் துரோகத்தை சற்றும் எதிர்பாராத சுகேது போரில் தோற்றார். இதையடுத்து சுகேது தன் மனைவியுடன் காட்டிற்குச் செல்ல நேரிட்டது. இருவரும் காட்டிற்குள் வசித்து வந்த ஆங்கிரஸ முனிவரை சந்தித்து ஆசிபெற்றனர். அந்த தம்பதியரின் துன்பங்களை அறிந்த முனிவர், அவர்களை பஞ்சவடி என்ற ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அவர்களை நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் முறைப்படி சரஸ்வதியை பூஜிக்கச் சொன்னார். சுதேவி முறைப்படி மகா சரஸ்வதியை பூஜித்தாள். ஆங்கிரஸ முனிவருக்கு பலவித தானங்களும் செய்தனர்.
பின் மன்னனும் அவரது மனைவியும் அங்கேயே தங்கியிருந்தனர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஆங்கிரஸ முனிவர், சூரிய பிரதாபன் எனப் பெயரிட்டார். அவன் வளர்ந்து ஆங்கிரஸ முனிவரிடம் சகல கலைகளும் கற்றுத் தேர்ந்தான், சரஸ்வதி தேவியின் அருளால் தன் தந்தையின் எதிரிகளை போரில் வென்று இழந்த தேசத்தை மீண்டும் பெற்றான்.
இந்த ஒரு நாளாவது...
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் பூஜிப்பது உத்தமம். இது முடியாவிட்டால் கூட கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை மட்டுமாவது பூஜிக்க வேண்டும். புத்தகத்திலோ, படத்திலோ சரஸ்வதி தேவியை ஆவாகனம் செய்து, தியானித்து பூஜிக்க வேண்டும். இதுவும் முடியாவிட்டால் கடைசி நாளிலாவது (சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை தினம்) சரஸ்வதியை கட்டாயம் பூஜிக்க வேண்டும்.
பூஜை செய்யும் முறை
சரஸ்வதி பூஜை அன்று வீட்டை சுத்தம் செய்து, கோலம் இட்டு, பூஜை அறையை மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். பின்பு பூஜை அறையில் சரஸ்வதி படம் வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம், பூவால் அலங்காரம் செய்ய வேண்டும். வீட்டில் படிக்கும் பிள்ளைகள் இருந்தால் அவர்களின் புத்தகங்கள், பேனா போன்றவற்றை இருபக்கங்களிலும் வைக்கலாம். இசைக்கருவிகள், ஆயுதங்கள், தொழில் செய்பவர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றையும் வைத்து, மலர்கள், சந்தனம், வஸ்திரம் ஆகியவற்றால் அலங்கரித்து சரஸ்வதி பூஜையை தொடங்க வேண்டும்.
மேலும், நவராத்திரி ஏழாவது நாள், மூல நட்சத்திரத்தில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்து, ஒன்பதாவது நாள் உத்திராடம் நட்சத்திரத்தில் பூஜையை முடிப்பது நன்மை தரும்.
சரஸ்வதி தேவியை வழிபடுவதால் கல்வி, கலைகள், செய்யும் தொழில்கள் வளர்ச்சி அடையும். வறுமை நீங்கி, தனவரவு கூடி, வாழ்க்கை மேலும் உயர்ந்த நிலையை அடைந்து, ஆனந்த வாழ்வை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மூல நட்சத்திர தீபம்
நவராத்திரியில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்யும்போது ஏற்றும் ஒரு அகண்ட தீபமே, 'மூல நட்சத்திர தீபம்' ஆகும். இந்த தீபமானது சரஸ்வதி வழிபாடு முடியும் வரையிலும் (நவராத்திரி கடைசி மூன்று நாட்கள் வரை), அணையாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டும். மூல நட்சத்திரத்தன்று காலையில் குளித்து புதிய ஆடை அணிந்து கொண்டு, பூஜை அறையை சுத்தம் செய்து, சரஸ்வதி படத்திற்கு முன்பாக கோலம் போட வேண்டும். அதன் மீது சிறிய மரப்பலகை அல்லது தட்டு வைத்து அதில் அரிசியை பரப்பிவைக்க வேண்டும். அதன் மீது விளக்கு வைத்து ஏற்றி பூ போட்டு வணங்க வேண்டும். நெய் தீபம் ஏற்றலாம். ஆனால் மூன்று நாட்களும் அது எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதால், நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சிறப்பு. ஒருவேளை தீபம் அணைந்து இருந்தால் காலையில் குளித்துவிட்டு மீண்டும் தீபம் ஏற்றுவது நல்லது.






