மகாளய அமாவாசையின் சிறப்புகள்


மகாளய அமாவாசையின் சிறப்புகள்
x

மகாளய பட்ச காலத்தில் முன்னோர்கள், அவர்களின் சந்ததியினர் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை 'மகாளய அமாவாசை' என்று போற்றப்படுகிறது. ஆவணி மாத பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை நாள் தொடங்கி, அடுத்து வரும் 15 நாட்களும் 'மகாளய பட்சம்' என்று சொல்லப்படுகிறது. மகாளய பட்ச காலத்தின் நிறைவாக வருவதே மகாளய அமாவாசையாகும். இந்த மகாளயபட்ச 15 நாட்களில் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தாரை காண பூமிக்கு வருவதாக ஐதீகம்.

முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான், பூமியில் உள்ள அவர்களின் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு வருடமும், முன்னோர் இறந்த திதி நாளை கணக்கில் கொண்டே திதி கொடுக்கப்படுகிறது. அது தவிர ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்கிறார்கள். இவ்வாறு, முன்னோர் திதி நாள், ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்ய தவறியவர்கள் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யலாம். முன்னோர்கள் இறந்த திதி தெரியாதவர்கள் கூட மகாளய பட்சத்தில் அவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

பொதுவாக அமாவாசை நாட்களில் மூன்று தலை முறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். ஆனால், மகாளய அமாவாசையன்று தாய்வழி, தந்தைவழி உறவினர்களுக்கு மட்டுமில்லாமல், ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், பங்காளிகள் என்று அனைவருக்குமே தர்ப்பணம் கொடுக்கலாம். இதுவே இந்த மகாளய அமாவாசையின் தனிச் சிறப்பாகும்.

மகாளய பட்ச காலத்தில் முன்னோர்கள், அவர்களின் சந்ததியினர் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது. அதனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அன்றைய தினம் அவர்களுக்கு பிடித்த உணவை படைக்கிறார்கள்.

பித்ருக்கள் வழிபாட்டில் கருப்பு எள்ளும், தர்ப்பை புல்லும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தர்ப்பணத்தின்போது முன்னோர்களுக்கு கொடுக்கும் எள்ளும், தண்ணீரும்தான் அவர்களுக்கான உணவாக கருதப்படுகிறது.

மகாளய அமாவாசை அன்று, பித்ரு வழிபாட்டுடன் குல தெய்வ வழிபாடு செய்வது சிறந்ததாகும். இவ்வாறு வழிபடுவதால், அதுவரை குலதெய்வத்தை வழிபடாத பாவமும், தோஷமும் நீங்கும், வாழ்க்கை பிரகாசமாக அமையும் என்பது நம்பிக்கை. அதுபோல அன்றைய தினம் காகத்திற்கு உணவு படைத்து வழிபடலாம். காகத்திற்கு படைக்கும் உணவு, முன்னோர்களுக்கு படைக்கப்படுவதாகவே நம்பப்படுகிறது.

மகாளய அமாவாசை தினத்தன்று, முன்னோர்கள் பூமிக்கு வரும்போது, அரச மரத்தில் தங்குவதாக ஐதீகம். எனவே மகாளய அமாவாசை அன்று அரச மரத்தடியில் ஒரு விளக்கை ஏற்றி வைத்து வணங்கலாம்.

1 More update

Next Story