சிவகங்கை: மல்லாகோட்டை பொன்னழகி அம்மன் கோவிலில் பால்குட விழா

பால்குட ஊர்வலம் கோவிலை அடைந்ததும் பொன்னழகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், வருஷாபிஷேகமும் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், மல்லாகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள பொன்னழகி அம்மன் திருக்கோவிலின் 9-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை மற்றும் பால்குடம் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி நேற்று மாலை 5 மணி அளவில் பொன்னழகி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை, மஹா கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. இரவு 7 மணி அளவில் சுதர்ஸன ஹோமம், துர்க்கா ஹோமம், மஹா பூர்ணாஹுதியைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
இன்று காலை 6 மணி அளவில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஸ்ரீ சந்திவீரன் சுவாமி கோவிலில் இருந்து பால்குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் கோவிலை அடைந்ததும் பொன்னழகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், வருஷாபிஷேகமும் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. மல்லாகோட்டை, நையினாபட்டி, எம்.சூரக்குடி, எஸ்.எஸ்.கோட்டை, மதுரை, ஓசூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஆப்பிளி கூட்டம் வகையறா பங்காளிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






