நாகை: கால பைரவருக்கு சிறப்பு பூஜை- திரளான பக்தர்கள் தரிசனம்

சீயாத்தமங்கை மற்றும் மறைஞாயநல்லூர் கோவில்களில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கால பைரவர்
பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. பைரவருக்கு மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சீயாத்தமங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து காஞ்சி மடத்தின் அருளாசி பெற்ற சந்திரசேகர சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு யாக பூஜை நடந்தது. பின்னர் புனித நீரால் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதே போல் கத்தரிப்புலம்-பனையடிகுத்தகை பகுதியில் மகா கால பைரவருக்கு காலை முதல் புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து யாக பூஜை நடந்தது. பைரவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சங்கு புஷ்பம் மற்றும் செவ்வரளி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வடமாலை சாற்றி சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தகட்டூர் பைரவர்
தகட்டூர் பைரவர் கோவில்
வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் பிரசித்தி பெற்ற பைரவர் கோவில் உள்ளது. வடக்கே காசியிலும் தெற்கே தகட்டூரில் மட்டுமே பைரவர் மூலவராக அருள் பாலிக்கிறார். இங்கு, ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் கோவில் வளாகத்தில் சிறப்பு மகா யாகம் வளர்க்கப்பட்டு, பூஜிக்கப்பட்ட கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டு பைரவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் வண்ண மலர்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






