கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ விழா தொடங்கியது


கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ விழா தொடங்கியது
x

வசந்த உற்சவத்தையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மதுரை

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் வைகாசி மாதம் வசந்த உற்சவ திருவிழா நேற்று மங்கள இசையோடு தொடங்கியது. மாலையில் இருப்பிடத்திலிருந்து சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி மேளதாளம் முழங்க, கோவில் யானை, குதிரையுடன், தீவட்டி பரிவாரங்களுடன் ஊர்வலமாக புறப்பாடாகி ஆடி வீதிகள், நந்தவனபகுதி, ராமர்சன்னதி வழியாக வந்து 18ம் படி கருப்பணசாமி கோவில், அக்ரஹாரம், பாதையில் சென்று வண்ண பூக்களால் அலங்கரிக்கபட்ட வசந்த மண்டபத்தை சென்றடைந்தார்.

அங்கு பல்வேறு பூஜைகளும், நூபுரகங்கை தீர்த்த அபிஷேகங்களும் பட்டர்களின் வேத மந்திரங்களுடன் நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்நிகழ்வுகளில் சுற்றுவட்டாரம், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர். தொடர்ந்து வந்த வழியாக அதே பரிவாரங்களுடன் சுவாமி சென்று இருப்பிடம் சேர்ந்தார்.

தினமும் மாலையில் 7.15 மணியிலிருந்து 7.45 மணிக்குள் இதே மண்டபத்தில் இந்த பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இந்த வசந்த உற்சவ திருவிழா 11-ந் தேதி நிறைவு பெறுகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் வசந்த மண்டபத்தில் சுவாமி எழுந்தருளும் காலத்தில் அழகர் மலையின் அருமையான தென்றல் காற்றும், வெப்பத்தை தணிக்கும் மழையும் பெய்வதாக ஐதீகம். இந்த திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் யக்ஞ நாராயணன், மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story