வேதாரண்யம் அருகே சிவலிங்கம் மீது சூரிய ஒளி.. அற்புத காட்சியை தரிசனம் செய்த பக்தர்கள்

சூரிய ஒளியில் பிரகாசித்த சிவலிங்கத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் மேல மறைக்காடர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமானுக்கு ருத்ர யாகம் உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாதமும் அஷ்டமியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி இக்கோவிலில் உள்ள கால பைரவர் சன்னதியில் சிறப்பு யாகம் நடைபெறும்.
இந்த ஆலயத்தில் இன்று காலை 6 மணியளவில் இக்கோவிலின் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி பட்டது. சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களால் ஈசனை வழிபட்ட நிகழ்வு சுமார் பத்து நிமிடம் நீடித்தது. சூரிய ஒளியில் பிரகாசித்த சிவலிங்கத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்பு சிவலிங்கத்திற்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் முதல் வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் என பக்தர்கள் தெரிவித்தனர்.






