சூரிய பகவானை போற்றும் ரத சப்தமி கொண்டாட்டம்


சூரிய பகவானை போற்றும் ரத சப்தமி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 3 Feb 2025 11:17 AM IST (Updated: 3 Feb 2025 4:52 PM IST)
t-max-icont-min-icon

ரத சப்தமி நாளில் சூரியனை வழிபாடு செய்தால், எண்ணற்ற பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தை அமாவாசைக்கு பிறகு வரும் ஏழாவது நாள் சப்தமி. இந்த நாள் சூரிய பகவான் அவதரித்த தினம் என்பதால், இதனை ரத சப்தமி என்று போற்றுகிறார்கள். சூரியன் தன் வடக்கு நோக்கிய பயண ஆரம்பத்தில், இந்த சப்தமி திதியிலிருந்துதான் தன் ஒளிக்கதிர்களுக்கு வெப்பத்தை சிறுகச் சிறுக கூட்டுகிறான் என்று சாஸ்திரம் கூறுகிறது.

ரத சப்தமி நாளில் சூரியன் அவதரித்ததாக கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளி பிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபடுவது விசேஷ பலனை தரும்.

சூரியன் அவதார தினம்

காசியப முனிவருக்கு பல மனைவிகள் உண்டு. அவர்களில் ஒருவர், அதிதி. ஒரு முறை அவர் தன் கணவரான காசியபருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது வாசலில் யாசகம் கேட்டு ஒரு அந்தணர் வந்து நின்றார். அப்போது அதிதி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், மெதுவாக நடந்து சென்று அந்தணருக்கான உணவை எடுத்துக் கொண்டு வந்தார்.

அப்போது யாசகம் கேட்டு வந்த அந்தணர், "உணவு எடுத்துவர இவ்வளவு தாமதமா? நீ என்னை உதாசீனப்படுத்தி விட்டாய். எனவே உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்" என்று சாபம் கொடுத்து விட்டுச் சென்றார். பயந்து போன அதிதி, இதுபற்றி தனது கணவரிடம் தெரிவித்தார். காசியபரோ, "நீ வருந்த வேண்டாம். தேவர் உலகத்தில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்" என்று கூறினார். அதன்படியே பிரகாசமான ஒளியுடன் சூரியன், அதிதிக்கு மகனாகப் பிறந்தார். அவர் அவதரித்த தினமே 'ரத சப்தமி' ஆகும்.

இந்த ஆண்டு ரத சப்தமி நாளை (4-2-2025) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சூரியனை நாம் வழிபாடு செய்தால், எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். அன்றைய தினம் செய்யும் தர்மங்களுக்கு அதிக புண்ணியம் வந்துசேரும். அதேபோல் இந்நாளில் தொடங்கும் தொழில், சிறப்பான வளர்ச்சியைப் பெறும். கணவனை இழந்த பெண்கள், இந்த வழிபாட்டை மேற்கொண்டால் அடுத்த பிறவியில் இந்த நிலை வராது என்கிறது புராணங்கள். தியானம், யோகாவை தொடங்க ரத சப்தமி சிறந்த தினமாக பார்க்கப்படுகிறது.


Next Story