தென்காசி: தோரணமலையில் கிரிவலப்பாதை அமைந்திட கூட்டுப்பிரார்த்தனை


தென்காசி: தோரணமலையில் கிரிவலப்பாதை அமைந்திட கூட்டுப்பிரார்த்தனை
x
தினத்தந்தி 5 Nov 2025 10:54 AM IST (Updated: 5 Nov 2025 11:35 AM IST)
t-max-icont-min-icon

தோரணமலையில் கிரிவலப்பாதை விரைவில் அமைந்திட மணி அடித்து கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.

தென்காசி


தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். சித்தர்களாலும் முனிவர்களாலும் வழிபடப்பட்ட இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கிரிவலம் நடப்பது வழக்கம். அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கிரிவலம் வந்தனர். அதிகாலை 5.30 மணிக்கு கிரிவலம் தொடங்கியது. சுமார் 6.30 கிலோமீட்டர் தூரம் உள்ள கிரிவல பாதையில் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கிரிவலம் வந்தனர்.

பின்பு உலக நன்மைக்காக பக்தர்கள் இணைந்து கூட்டு பிரார்த்தனை நடத்தினர். இதில் கீழ்கண்ட வேண்டுதல்களை முன்னிருத்தி பிரார்த்தனை நடந்தது.

“வடகிழக்கு பருவ மழை சிறப்பாக பொழிந்து நாட்டை செழிக்க வைப்பாய் தோரண மலை முருகா..

அனைத்து அம்சங்களிலும் இந்தியா தன்னிறைவு பெற அருள்வாய் தோரண மலை முருகா..

இத்தலத்தில் கிரிவல பாதை சிறப்பாக, விரைவாக அமைய அருள்புரிவாய் தோரண மலை முருகா..

நாட்டில் உள்ள அனைவரையும் நம் பாரம்பரிய ஆன்மிக வழிக்கு கொண்டு வா தோரண மலை முருகா..

நமது ஆன்மிக தத்துவத்தின் படி மக்களை நல் வழியில் நடக்க வைப்பாய் தோரணமலை முருகா..

போதை பொருள் பழக்கத்தில் இருக்கும் மக்களை அதிலிருந்து விடுவிப்பாய் தோரண மலை முருகா..

மக்களிடையே சமத்துவம் சகோதரத்துவத்தை வளர்ப்பாய் தோரண மலை முருகா..

பீடி தொழிலாளர்களின் உடல்நலம் சிறப்பாக இருக்க துணைபுரிவாய் தோரண மலை முருகா..

கிராமப்புற மாணவர்கள் கல்வியில் சிறந்து வாழ்க்கையில் முன்னேற அருள்வாய் தோரண மலை முருகா..

இறைபணி ஆற்றும் அனைவரையும் இனிமையாய் வாழவைப்பாய் தோரண மலை முருகா..

மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் நோயின்றி வாழ அருள்வாய் தோரண மலை முருகா”

மேற்கண்ட கோரிக்கைகள் வேண்டி கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.

ஒவ்வொரு வேண்டுதலின் போதும் பக்தர்கள் தொங்கவிட்டிருந்த மணிகளை அடித்து வேண்டினர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.

1 More update

Next Story