திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புஷ்ப யாகம்.. 9 டன் மலர்களால் அபிஷேகம்

புஷ்ப யாகத்திற்காக 16 வகையான பூக்கள் மற்றும் 6 வகையான இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழாவிற்கு பிறகு புஷ்ப யாகம் பிரமாண்டமாக நடத்தப்படும். அவ்வகையில் இந்த ஆண்டிற்கான புஷ்ப யாகம் நேற்று மாலை வசந்த மண்டபத்தில் அங்குரார்ப்பணம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மிருத்சங்கிரஹனம், ஆஸ்தானம் மற்றும் சிறப்பு பூஜையுடன் அங்குரார்ப்பணம் நடைபெற்றது.
புஷ்ப யாகத்திற்கான ஏற்பாடுகள் இன்று காலையில் தொடங்கின. திருமலை கல்யாணவேதிகாவில் உள்ள தோட்டக்கலைத் துறையில் பூக்களுக்கு முதலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கோவில் துணை நிர்வாக அதிகாரி லோகநாதம், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஸ்ரீனிவாசலு, தோட்டக்கலை ஊழியர்கள் மற்றும் கோவில் சேவையில் ஈடுபடுவோர் இணைந்து பூக்களை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
கல்யாண மண்டபத்தில் காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. பின்னர் பிற்பகல் 2 மணிக்கு புஷ்ப யாகம் தொடங்கியது. மாலை 5 மணி வரை இந்த பிரமாண்ட புஷ்ப யாகம் நடைபெறுகிறது. பல வகையான நறுமண, பாரம்பரிய மற்றும் அலங்கார மலர்களால் உற்சவர்களுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக 16 வகையான பூக்கள் மற்றும் 6 வகையான இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. புஷ்ப யாகத்தில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
புஷ்ப யாகத்திற்காக தமிழ்நாட்டிலிருந்து 5 டன், கர்நாடகாவிலிருந்து 2 டன் மற்றும் ஆந்திராவிலிருந்து 2 டன் என மொத்தம் 9 டன் பூக்களை நன்கொடையாளர்கள் நன்கொடையாக வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவிலில் நடைபெற்ற பிரம்மோற்சவங்களின்போது ஏதேனும் அறியாமல் பிழைகள் நடந்திருந்தால், அந்த பிழைகளை நிவர்த்தி செய்ய, பிரம்மோற்சவங்களுக்குப் பிறகு ஸ்ரீவாரியின் பிறந்த நட்சத்திரமான ஷ்ரவண நட்சத்திர நாளில் புஷ்பயாகம் நடத்தப்படுகிறது.






