தேய்பிறை அஷ்டமி: காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு

கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கால பைரவரை வழிபடுவதற்கு உகந்த தினமாக தேய்பிறை அஷ்டமி தினம் சொல்லப்படுகிறது. அவ்வகையில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தேய்பிறை அஷ்டமியையொட்டி தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் அருள்பாலித்து வரும் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு மற்றும் யாக பூஜைகள் நடந்தன. காலபைரவருக்கு மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை தரிசனம் செய்தனர். இதே போல் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பைரவர் சன்னதி, ரெயிலடியில் உள்ள கால பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
இதேபோல் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கோவில்பத்து வெற்றிவேல் முருகன் கோவிலில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வரும் சொர்ண பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சன்னதியின் எதிரில் யாக பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்புத்தூர் திருத்தளி நாதர் கோவிலில் யோக பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பைரவருக்கு சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து விபூதிக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த யோக பைரவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.