திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா

முல்லைவனநாதர் மற்றும் கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் சமேத முல்லைவனநாதர் திருக்கோவில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி காலை மற்றும் இரவு வேளைகளில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
விழாவின் 10-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று மதியம் தீர்த்தவாரி நடைபெற்றது. இரவில் வெள்ளி வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதையொட்டி சுவாமி முல்லைவனநாதர், அம்பாள் கர்ப்பரட்சாம்பிகைக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதியுலா தொடங்கியது. பஞ்சமூர்த்திகள் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.