திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் ஆவணி பெருந்திருவிழா தொடங்கியது


தினத்தந்தி 20 Aug 2025 12:36 PM IST (Updated: 20 Aug 2025 3:02 PM IST)
t-max-icont-min-icon

ஆவணி பெருந்திருவிழாவின் 10-ம் நாளில், அதாவது வரும் 29ம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் தேரோட்டம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில், நவதிருப்பதி ஸ்தலங்களில் 8வது ஸ்தலம் ஆகும். செவ்வாய் ஸ்தலமும், நிதியை இழந்த குபேரனுக்கு அவன் இழந்த செல்வத்தை தேடி எடுத்துக்கொண்டு பின்னர் குபேரன் வணங்கும் ஜோதியாய் அருள்பாலித்த ஸ்தலமாகும்.

இங்கு வைத்தமாநிதி பெருமாள் தலைக்கு மரக்கால் கொண்டு சயன திருக்கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மேலும் மதுரகவி ஆழ்வார் அவதரித்த ஸ்தலமாகும்.

இக்கோவிலில் ஆவணி பெருந்திருவிழா இன்று (20ம் தேதி) காலை தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு இன்று உற்சவர் வைத்தமாநிதி மற்றும் மதுரகவி ஆழ்வார் இருவரும் கொடிமரம் அருகில் எழுந்தருளினார்கள். அதை தொடர்ந்து கொடிபட்டம் மாடவீதியை வலம் வந்து காலை 9.55 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கி, சடாரி வைத்து பிரசாதம் வழங்கப்பட்டது.

இம்மாதம் 30ம்தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. விழா நாட்களில் தினசரி காலை வைத்தமாநிதி பெருமாள் மாடவீதி எழுந்தருளல், இரவில் வாகன சேவைநடைபெறுகிறது. இந்திர வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அன்ன வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என தினமும் ஒவ்வொரு வாகனத்தில் பகவான் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

கருடசேவை

5ம் நாள் திருவிழா நாளான 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கருட சேவையை முன்னிட்டு வைத்தமாநிதி பெருமாள் கருட வாகனத்திலும் மதுரகவி ஆழ்வார் அன்னவாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 9ம் திருவிழா நாளான 28ம் தேதி வியாழக்கிழமை சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளல் நிகழ்ச்சியும், சுவாமி மதுரகவி ஆழ்வார் எதிர்கொண்டு அழைத்தல், மங்களாசாசனம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு குதிரை வாகனத்தில் தேர் கடாஷித்தல், பல்லக்கில் சுவாமி நம்மாழ்வார் ஆஸ்தானம் திரும்புதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தேரோட்டம்

10 நாள் திருவிழா நாளான 29ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.40 மணிக்கு மேல் 8.20 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருளல், அதை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு 6 மணிக்கு பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11ம் திருவிழா நாளான 30ம் தேதி சனிக்கிழமை பெருமாள், தாயார் பல்லக்கில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு வெட்டி வேர் சப்பரம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

1 More update

Next Story