சென்னையில் நாளை திருப்பதி திருக்குடை ஊர்வலம்- மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது


சென்னையில் நாளை திருப்பதி திருக்குடை ஊர்வலம்- மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது
x

சென்ன கேசவ பெருமாள் கோவிலில் புறப்படும் திருக்குடை ஊர்வலம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது.

சென்னை

திருப்பதி பிரம்மோற்சவ காலத்தில், ஏழுமலையான் கோவிலில் நடக்கும் கருட சேவையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட், திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை சென்னையில் இருந்து 5 நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்து வருகிறது. அவ்வகையில் 21-வது ஆண்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் நாளை (22.9.2025) பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

நாளை காலை 10.30 மணிக்கு, சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் திருக்குடைகள் ஊர்வலம் தொடங்குகிறது. உடுப்பி ஸ்ரீ பலிமார் மடம் பீடாதிபதி ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தரு சுவாமிகள் ஆசியுரை வழங்கி திருக்குடைகள் ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். தொடக்கவிழா நிகழ்ச்சியில், ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ். வேதாந்தம்ஜி, அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜி, விசுவ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச் செயலாளர் டாக்டர் கிரிஜா சேஷாத்திரி, தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் மாநில செயல் தலைவர் ஆர். செல்லமுத்து (ஐஏஎஸ் ஓய்வு), பொதுச்செயலாளர் எஸ். சோமசுந்தரம் ஆகியோர் பேசுகின்றனர்.

சென்ன கேசவ பெருமாள் கோவிலில் நாளை காலையில் புறப்படும் திருக்குடை ஊர்வலம் என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. சென்னையில் ஊர்வலம் செல்லும் பாதைகளில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் கூடுவார்கள் என்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து 5 நாட்கள் ஊர்வலமாக சென்று, 26-ம் தேதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 2 திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. மற்ற திருக்குடைகள், வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்கள் 27-ம் தேதி சனிக்கிழமை மாலை திருமலையில், ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. தென் இந்தியாவின் மிகபிரமாண்டமான திருக்குடை ஊர்வலத்தை பல லட்சம் மக்கள் தரிசனம் செய்வார்கள்.

1 More update

Next Story