இன்று இந்திர ஏகாதசி.. பித்ரு தோஷம் போக்க பெருமாளை வணங்க வேண்டிய நாள்!

மூதாதையர் ஆன்மா சாந்தியடையாமல் இருந்தால், இந்திரா ஏகாதசி விரதம் அவருக்கு முக்தியைத் தரும் என்று ஆன்மீக நூல்களில் கூறப்பட்டுள்ளது.
திருமாலுக்கு உகந்த ஏகாதசி விரதமானது, விரதங்களில் மிகவும் மேன்மையான விரதம் ஆகும். பாவங்களை போக்கி, மோட்சத்தை தரக்கூடிய புண்ணிய விரதமாகும். அவ்வகையில் புரட்டாசி மாத முதல் நாளான இன்று கடைபிடிக்கப்படும் விரதம் இந்திர ஏகாதசி விரதம் ஆகும். பித்ரு வழிபாட்டிற்கு உகந்த மகாளய பட்ச காலத்தில் இந்த ஏகாதசி இணைந்து வருவதால கூடுதல் சிறப்பு பெறுகிறது.
பாவச் செயல்களால் அல்லது கர்ம வினைகளால், ஒரு மூதாதையர் ஆன்மா சாந்தியடையாமல் இருந்தால், இந்த இந்திரா ஏகாதசி விரதம் அவருக்கு முக்தியைத் தரும் என்று ஆன்மீக நூல்களில் கூறப்பட்டுள்ளது. பத்ம புராணத்தின்படி, இந்திர ஏகாதசியில் மேற்கொள்ளப்படும் விரதத்தின் பலனையும் தானத்தையும் மூதாதையர்களுக்கு அர்ப்பணிப்பதன் மூலம், அவர்கள் முக்தியை அடைந்து வைகுண்ட லோகத்திற்குச் செல்கிறார்கள். இந்த விரதத்தை அனுஷ்டிப்பவரின் ஏழு தலைமுறைகள் வரையிலான மூதாதையர்கள் திருப்தி அடைகிறார்கள். இதனால், இறந்தவர்கள் முக்தி அடைவது மட்டுமல்லாமல், அதன் மூலம் தலைமுறைகள் பித்ரு சாபமும் தோஷமும் நீங்கப்பெறும் என்பது நம்பிக்கை.
ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் பித்ரு தோஷங்கள் நீங்கி குடும்ப வாழ்க்கையில் சுபிட்சங்களும், நிம்மதியும் உண்டாகும். இந்திர ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று பகவானை வழிபட்டு, அதன்பின் அவரவரின் சக்திக்கேற்ப அன்னதானம் கொடுக்கலாம்.
இந்திர ஏகாதசி விரத பலனை விளக்கும் புராண கதை:
மாஹிஷ்மதி என்ற நகரை இந்திரசேனன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். சிறந்த விஷ்ணு பக்தன். ஒரு நாள் அவனுடைய அரசவைக்கு நாரத முனிவர் வந்தார். அவரை வரவேற்று வணங்கி அவர் வந்த நோக்கத்தை மன்னன் கேட்டான்.
“மன்னா! நான் இப்போது எம லோகத்தில் இருந்து வருகிறேன். அங்கு உன் தந்தை நரகத்தில் கடுந்துயரை அனுபவித்து வருகிறார். அவர், ‘என் மகனிடம் சொல்லி, இந்திர ஏகாதசி விரதத்தைச் செய்ய சொல்லுங்கள் என்று சொன்னார். என் மகன் பூலோகத்தில் இந்த விரதத்தைக் கடைபிடித்தால், நான் இங்கு நரகத்தில் இருந்து விடுதலை பெறுவேன். என்னை கரையேற்றும்படி என் பிள்ளையிடம் சொல்லுங்கள்’ என்று என்னிடம் சொல்லி அனுப்பினார். அதைச் சொல்வதற்காகவே தற்போது நான் வந்தேன். எனவே, நீ இந்திர ஏகாதசி அன்று விரதம் இருந்து வழிபாடு செய். உன் தந்தைக்கு நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்” என்று நாரதர் கூறினார். விரதம் இருக்கும் முறையையும் நாரதர் எடுத்துரைததார்.
உடனே மன்னர் இந்திர ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து, தந்தைக்கு சிரார்த்தம் செய்தார். அவருடைய தந்தையும் நரகத்தில் இருந்து விடுதலை அடைந்து சொர்க்கம் சென்று மகனுக்கு ஆசி வழங்கினார்.
இத்தகைய மகிமை வாய்ந்த இந்திர ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து பகவானை வழிபட்டு வேண்டிக்கொண்டால், முன்னோர்கள் மோட்சம் அடைவதுடன், அவர்களின் ஆசியும் கிடைக்கும். விரதம் இருக்க முடியாதவர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிவித்து வணங்கலாம்.






