உடையப்பன் குடியிருப்பு நாராயணசுவாமி கோவில் திருவிழா

அனுமன் வாகனத்தில் அய்யா பவனி வந்த காட்சி
திருத்தேர் திருவிழாவின் 9-ம் நாளில் அய்யா அனுமன் வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் ஆனி மாத செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் திருவிழா கடந்த 20-ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் பணிவிடை, உகப்பிடிப்பு, உச்சிப்படிப்பு, நாதஸ்வர கச்சேரி, அன்னதர்மம், அய்யா பல்வேறு வாகனத்தில் பவனி வருதல், கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை பட்டிமன்றம், திரைப்பட மெல்லிசை விருந்து நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று மாலை 5 மணிக்கு அய்யா அனுமன் வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும், 6:30 மணிக்கு மாபெரும் அன்னதர்மமும், இரவு 8.30 மணிக்கு உடையப்பன்குடியிருப்பு அகிலம் கலா மன்றத்தாரின் 21-வது படைப்பான கவிஞர் உமையவள் தாசனின் "ஒரு செல்போனும் ஒரு செல்ல மகனும்" என்ற சமூக சீர்திருத்த நாடகம் நடைபெற்றது.
10-ம் நாள் திருவிழாவான இன்று மாலை 5 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும், 6:30 மணிக்கு மாபெரும் அன்னதர்மமும், இரவு 8.30 மணிக்கு மாபெரும் திரைப்பட மெல்லிசை விருந்து நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் வீதி உலா நாளை (30-ம் தேதி) நடக்கிறது. காலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு பணிவிடையும் உகப்படிப்பும், நண்பகல் 1 மணிக்கு பணிவிடையும், மாலை 2 மணிக்கு ஆஞ்சநேயர் திருத்தேர் முன்னே செல்ல செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 12 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், 1 மணிக்கு அய்யாவின் வாகன பவனி நிகழ்ச்சியும், 2 மணிக்கு திருக்கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து இனிப்பு வழங்குவது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.






