வைகாசி திருவிழா: ஜெனகை மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்

மாரியம்மனுக்கு பால், தயிர், நெய், வெண்ணெய், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிசேகம் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 13ஆம் நாள் மண்டகப்படியையொட்டி சோழவந்தான் வடக்கு ரத வீதி வேளாளர் உறவின்முறை சங்கம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காலையில் வைகை ஆற்றில் இருந்து மேளதாளம் அதிர்வேட்டுகள் முழங்க தீர்த்த குடம் எடுத்து நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து உறவின்முறை சங்கத்தில் மாரியம்மனுக்கு பால், தயிர், நெய், வெண்ணெய், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிசேகங்கள் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சுமார் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு ரிஷப வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது. இதில் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள், ஜெனகை மாரியம்மனை தரிசனம் செய்தனர்.






