வீரபத்திரர் கோவில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்


வீரபத்திரர் கோவில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
x

விரதம் இருந்த பக்தர்கள் அமர்ந்திருக்க, அவர்களின் தலையில் பூசாரி தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள வரப்பட்டியில் குரும்ப கவுண்டர் ஆரியகுல பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட வீரபத்திரர் கோவில் உள்ளது. இங்கு பெருமாள், வீரபத்திரர், பட்டவன், பாப்பாத்தி, மதுரை வீரன் சன்னதிகள் உள்ளன.

இக்கோவிலின் ஆடி மாத திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் தங்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது இந்த திருவிழாவின்போது நடைபெறும் முக்கிய வழிபாடாகும். இவ்வாறு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ள பக்தர்களுக்கு கடந்த 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கையில் கங்கணம் கட்டப்பட்டது‌. இதையடுத்து அவர்கள் விரதம் மேற்கொண்டனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு கங்கைக்கு சென்று கரகம் அலங்காரம் செய்யப்பட்டு சக்தி அளிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட கரகம் வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது. அதன்பின் பொங்கல் வைத்து வீரபுத்திரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கோவில் முன்பு ஈர உடையுடன் அமர்ந்திருக்க, பூசாரி அருள் வந்து ஆடிக்கொண்டே பக்தர்களின் தலையில் தேங்காயை உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். இதன் பிறகு மதுரைவீரன் சாமிக்கு கிடா வெட்டி அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் திண்டுக்கல், திருச்சி, கரூர், மதுரை, கோவை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

நாளை (7ம் தேதி வியாழக்கிழமை) கோவிலில் இருந்து சுவாமிகள் கரகம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கங்கையில் கரைக்கப்பட உள்ளது.

1 More update

Next Story