மாமல்லபுரம் கடலில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு


மாமல்லபுரம் கடலில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு
x

மாட்டு வண்டிகள், டிராக்டர், வேன்களில் விநாயகர் சிலைகளை ஏற்றி மாமல்லபுரம் கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

செங்கல்பட்டு

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 27-ந் தேதி (புதன்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தெருக்கள், வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைக்கப்படடுள்ள விநாயகர் சிலைகளை இன்று (ஞாயிற்றுகிழமை) மாமல்லபுரம் கடலில் கரைக்க போலீசார் அனுமதி வழங்கினர்.

அதன்படி இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. காஞ்சிபுரம் நகரம், பாலுசெட்டிசத்திரம், வாலாஜபாத், செவிலிமேடு, கருக்குபேட்டை, முத்தியால்பேட்டை, சிங்கபெருமாள்கோவில், திம்மாவரம், பாலூர், படாளம், கூடுவாஞ்சேரி, திருக்கழுக்குன்றம், கழனிப்பாக்கம், எச்சூர், மானாமதி, நெம்மேலி, ஊரப்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகளை மாட்டு வண்டிகள், டிராக்டர், வேன்களில் ஏற்றி கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

மாமல்லபுரம் வந்தடைந்ததும் அங்கு தேங்காய் உடைத்து தீப ஆராதனை செய்து வழிபட்டார்கள். பிறகு நீச்சல் தெரிந்த மாமல்லபுரம் மீனவ இளைஞர்கள் மூலம் ஒவ்வொரு சிலையாக தூக்கி செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. கடல் சீற்றம் காரணமாக சிலைகள் எடுத்து வந்த சிலை அமைப்பாளர்கள் யாரையும் கடலில் இறங்கி கரைக்க போலீசார் அனுமதிக்கவில்லை.

மேலும் பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட நூற்றுக்கணக்கான களிமண் விநாயகர் சிலைகளும் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை கரைப்பின்போது கடற்கரையில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் தலைமையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியிலும், வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஈடுபட்டனர்.

1 More update

Next Story