விநாயகர் ஊர்வலம்.. சிலைகளை கரைக்க தமிழகம் முழுவதும் விரிவான ஏற்பாடுகள்

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி தேவையான இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்கள் சார்பிலும், இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு வழிபாட்டு குழுவினர் மற்றும் அந்தந்த பகுதி சங்கங்கள் சார்பிலும் பொது இடங்களில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்தனர். இதேபோல் வீடுகளில் பூஜை செய்பவர்கள் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். பின்னர் அந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று விநாயகர் ஊர்வலம் நடைபெறுகிறது. பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பிரமாண்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் இன்று சுமார் 35 ஆயிரம் சிலைகள் கரைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலைகளை கரைப்பதற்காக அந்தந்த பகுதி நிர்வாகம் சார்பில் முக்கியமான நீர்நிலைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஊர்வல பாதைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, காவல்துறை அனுமதிக்கப்பட்ட பாதைகள் வழியாக விநாயகர் ஊர்வலம் நடைபெறுகிறது. ஒரு சில இடங்களில் இன்று காலையிலேயே ஊர்வலம் தொடங்கியது. விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொணடு சென்று, அனுமதிக்கப்பட்ட இடங்களில் கரைக்கின்றனர். சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். சிலைகளை கடலில் சற்று ஆழமான பகுதியில் மூழ்கடித்து கரைப்பதற்காக மிகப்பெரிய கிரேன்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான சிலைகள் அணிவகுத்து வரும் என்பதால், விநாயகர் சிலை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
திருநெல்வேலி மாநகரில் வைக்கப்பட்டு உள்ள 80-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, வண்ணார்பேட்டையில் உள்ள தற்காலிக குளத்தில் கரைக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுபடி விநாயகர் சிலைகளை கடந்த 2 ஆண்டுகளாக தாமிரபரணி ஆற்றில் கரைக்காமல், அருகில் தற்காலிக குளம் தயார் செய்யப்பட்டு அங்கு கரைக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் அருகே உள்ள தற்காலிக குளத்துக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து மின் மோட்டார், ஆயில் மோட்டார்கள் மூலம் நீர் நிரப்பப்பட்டுள்ளது.






