முதலீடுகளை ஈர்ப்பதில் உலக அளவில் துபாய் 23-வது இடம் பிடித்துள்ளது


முதலீடுகளை ஈர்ப்பதில் உலக அளவில் துபாய் 23-வது இடம் பிடித்துள்ளது
x
தினத்தந்தி 26 Oct 2023 8:30 PM GMT (Updated: 26 Oct 2023 8:30 PM GMT)

முதலீடுகளை ஈர்ப்பதில் உலக அளவில் துபாய் 23-வது இடத்தை பெற்றுள்ளது.

துபாய்,

துபாய் உலகின் மிகவும் முக்கிய சுற்றுலா மற்றும் வர்த்தக நகரமாக திகழ்கிறது. சர்வதேச நிறுவனம் ஒன்று வெளியிட்ட ஆய்வில் துபாய் நகரம் இந்த பிராந்தியத்தில் முதலிடத்தை வகித்து வருகிறது. இதற்கு மிகவும் முக்கிய காரணம் இந்த நகரம் தொடர்ந்து முதலீடுகள், திறமையானவர்கள், புதிய சிந்தனைகள் ஆகியவற்றை கவர்ந்து வருவதே மிகவும் முக்கியமான காரணம் ஆகும். மேலும் உலக நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில் 23-வது இடத்தையும் பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் 24-வது இடத்தில் இருந்தது. உலகின் மற்ற முக்கிய நகரங்களான பார்சிலோனா, இஸ்தான்புல், போஸ்டன், பிராங்க்பர்ட், வியன்னா, மியாமி உள்ளிட்டவற்றைவிட துபாய் முன்னணியில் இருக்கிறது.

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு துபாய் மிகவும் முக்கியமான வர்த்தக நகரமாக இருப்பதால் இங்கு தங்களது அலுவலகங்களை திறக்க நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. மேலும் இந்த நகரத்தில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது. மேலும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வகையிலான சட்டதிட்டங்களும் இதற்கு முக்கியமான காரணம். பல்வேறு திறமை கொண்டவர்கள் இந்த நகரில் கிடைப்பதும், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையும் சிறப்பானதாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

இங்கிருப்பவர்கள் உலகின் பிற நாடுகளுக்கு எளிதில் செல்லும் வகையில் விமான போக்குவரத்து வசதிகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. உலகின் ஒவ்வொரு நகரமும் மனித முதலீடு, தகவல் பரிமாற்றம், கலாசார அனுபவம், அரசியல் சூழல் மற்றும் வர்த்தக நடவடிக்கை உள்ளிட்ட 5 அம்சங்களை கொண்டு மதிப்பிடப்படுகிறது. தொடர்ந்து 3-வது ஆண்டாக இத்தகைய மதிப்பீட்டில் சிறப்பானதாக இருப்பதால் துபாய் நகரம் உலகில் முதல் 25 நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது.


Next Story