துபாய் திரையரங்குகளில் ஆரவாரத்துடன் வெளியான 'லியோ' திரைப்படம்


துபாய் திரையரங்குகளில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியானது. ஆட்டம், பாட்டத்துடன் வெளியான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கரகாட்டம், செண்டை மேளத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

துபாய்,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அமீரகம் உள்ளிட்ட வளைகுடா பகுதிகளில் நேற்று முன்தினம் வெளியானது. இந்த திரைப்படத்தை அமீரகத்தில் பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

திரைப்படத்தை காண அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலர் முன் கூட்டியே முன்பதிவு செய்ததால் அனைத்து திரையரங்குகளும் நிரம்பி வழிந்தது. குறிப்பாக ரசிகர் மன்றத்தினர் இந்த திரைப்படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

சிறப்பு ஏற்பாடுகள்

இதில் அமீரக தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்வி உதவிக்காக 67 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அந்த இயக்கத்தின் தலைவர் பி.கார்த்திகேயன், நிர்வாகிகள் டி.மதன்குமார், எப்.அமீர்கான், எம்.சாமிதுரை, ஐ.ரஷோ ஜானு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து நேற்று மாலை துபாய் அல் குரைர் வணிக வளாகத்தில் உள்ள ஸ்டார் சினிமாஸ் திரையரங்குகளில் லியோ திரைப்படத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதில் யெஸ் ஈவண்ட்ஸ் மற்றும் ஸ்பிரட் ஸ்மைல்ஸ் ஈவண்ட்ஸ் அண்ட் மீடியா நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

அதேபோல், அமீரக தளபதி விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் நடந்த சிறப்பு காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல பாடகர் எஸ்.என் சுரேந்தரின் மகளும், பாடகியுமான பல்லவி வினோத்குமார், அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் பால் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ரசிகர் மன்றம் சார்பில் ரகுவரன், சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் தமிழ் பண்பலைகளான 89.4 தமிழ் எப்.எம் மற்றும் ரேடியோ கில்லி 106.5 எப்.எம் வானொலிகள் சார்பில் சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும் அந்த வணிக வளாகத்தில் கரகாட்டம், செண்டை மேளம் முழங்க ஆரவாரத்துடன் லியோ திரைப்படத்தை ரசிகர்கள் வெகு உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

1 More update

Next Story