அமீரகத்தில் சுற்றுலா பயணிகள் வாட் வரியை எளிதில் பெற்றுக்கொள்ள வசதி: அதிகாரி தகவல்


அமீரகத்தில் சுற்றுலா பயணிகள் வாட் வரியை எளிதில் பெற்றுக்கொள்ள வசதி: அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 20 Oct 2023 12:18 PM GMT (Updated: 20 Oct 2023 12:39 PM GMT)

அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கான வாட் வரியை செயலி மூலம் எளிதில் பெற்றுக்கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது என்று அதிகாரி கூறினார்.

துபாய்:

இது குறித்து மத்திய வரிவிதிப்பு ஆணையத்தின் வரி செலுத்துவோர் சேவைகள் பிரிவின் இயக்குனர் சஹ்ரா அல் தஹ்மானி, ஜிடெக்ஸ் குளோபல் தொழில்நுட்ப கண்காட்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அமீரகத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வாட் வரி விதிப்பு சுற்றுலா பயணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் அவர்கள் தங்கள் விசா காலம் முடிந்து நாட்டை விட்டு செல்வதற்கு முன்னதாக தாங்கள் செலுத்திய வாட் வரியை திரும்ப பெறலாம்.

இதற்காக விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற எல்லை பகுதிகளில் தானியங்கி எந்திரங்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை கவுண்ட்டர்கள் செயல்படுகின்றன. தற்போது இந்த துபாய் ஜிடெக்ஸ் குளோபல் தொழில்நுட்ப கண்காட்சியில் டூரிஸ்ட் ரீபண்ட் என்ற பெயரில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலியினை அமீரகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு கடைகளில் பொருட்கள் வாங்கும்போது ஸ்கேன் செய்து ரசீதுகளை அவ்வப்போது பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும். நாட்டை விட்டு வெளியேறும் போது விமான நிலையங்களுக்கு செல்லும்போது குறிப்பிட்ட தானியங்கி பகுதியில் செயலியில் உள்ள ரசீதை காண்பித்து பணமாகவோ அல்லது தங்கள் கிரெடிட் கார்டிலோ பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் நீண்ட வரிசையில் நிற்பது தவிர்க்கப்படுகிறது. மேலும் எளிதில் பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது.

துபாயில் நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் 85 லட்சத்து 50 ஆயிரம் வெளிநாட்டு பயணிகளை வரவேற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். தற்போது ஆண்டிராய்டு தளத்தில் இந்த செயலி செயல்பாட்டில் உள்ளது. விரைவில் ஆப்பிள் போன்களிலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story